ஹைதராபாத் :

ல்வேறு மாநில சட்டசபை இடைத்தேர்தல்களுடன் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள துப்பக் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்) கட்சியை சேர்ந்த ராமலிங்க ரெட்டி மரணம் அடைந்தததால், இங்கு இடைத்தேர்தல் நடந்தது.

ஆளும் டி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளராக ராமலிங்க ரெட்டியின் மனைவி சுஜாதா நிறுத்தப்பட்டார். பா.ஜ.க. சார்பில், ரகுநந்தன் ராவும், காங்கிரஸ் சார்பில் சீனிவாச ரெட்டியும் வேட்பாளராக நிறுத்தப்பட்டனர்.

ஆளும் கட்சியாக இருப்பதோடு, அனுதாப அலையும் வீசியதால் டி.ஆர்.எஸ். வேட்பாளர் சுஜாதா எளிதில் வெல்வார் என கருதப்பட்டது.

ஆனால் இந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ரகுநந்தன் 1,019 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி.ஆர்.எஸ். கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார். டி.ஆர்.எஸ். கட்சி இரண்டாம் இடத்தையே பெற முடிந்தது. காங்கிரஸ் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

துப்பக் தொகுதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ரகுநந்தன் ராவ், ஒரு பத்திரிகையாளர் ஆவார். சித்திப்பேட்டையை சேர்ந்த இவர் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனவர்.

கடந்த 1991 ஆம் ஆண்டு சித்திப்பேட்டையில் இருந்து பெதஞ்செரு பகுதிக்கு குடியேறிய ரகுநந்தன் ராவ், அங்கு தெலுங்கு பத்திரிகையில் செய்தியாளராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். அதன் பிறகு வக்கீல் தொழில் சமூக சேவை, அரசியல் என படிப்படியாக வளர்ந்து இன்று எம்.எல்.ஏ. வாகி விட்டார்.

– பா. பாரதி