மதுரா, உத்திரப் பிரதேசம்
இந்தியாவில் பத்திரிகைத் துறை மகாபாரதக் காலத்திலேயே தொடங்கி விட்டதாக உ பி துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.
நேற்று ‘இந்தி பத்திரிகைத் துறை தினம்’ உத்திரப் பிரதேச மாநிலத்தில் கொண்டாடப்பட்டது. இதை ஒட்டி உத்திரப் பிரதேச மாநிலம் மதுரா நகரில் ஒரு விழா ஒன்று நடைபெற்றது. அதில் உத்திரப் பிரதேச மாநில துணை முதல்வர் தினேஷ் சர்மா கலந்துக் கொண்டு உரையாற்றினார்.
தினேஷ் சர்மா தனது உரையில், “பத்திரிகைத் துறை எப்போது முதலில் தொடங்கப்பட்டது என்பது குறித்து பல தகவல்கள் உள்ளன. உண்மையில் மகாபாரதக் காலத்திலேயே இந்தியாவில் பத்திரிகைத் துறை தொடங்கப் பட்டு விட்டது. மகாபாரதப் போர் நிகழ்வுகளை திருதராஷ்டிரனுக்கு சஞ்சயன் தெரிவித்ததில் இருந்து பத்திரிகைத் துறை ஆரம்பித்துள்ளது.
அதுதான் முதல் நேரடி ஒளிபரப்பு என்பதில் ஐயமில்லை.
ஏற்கனவே கூறியது போல நாரதர் கூகுளுக்கு இணையாக தகவல்கள் தெரிவிப்பதில் வல்லவராக இருந்தார். அத்துடன் செய்திகளை அந்த இடத்துக்கு சென்று அவைகளை உலகமெங்கும் மும்முறை நாராயண என ஜெபிப்பதன் மூலம் அறியச் செய்துள்ளார்.” என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் அவர் அரசு மற்றும் பத்திரிகையாளர் உறவு குறித்து பேசியதும், பத்திரிகையாளர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்ததும் அவருடைய இந்தப் பேச்சினால் பலரின் கவனத்தை கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.