ஜெய்ப்பூர்:
தர பரிசோதனையில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து ஜான்சன்&ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனை செய்ய குழந்தைகள் நல ஆணையம் அதிரடி தடை விதித்துள்ளது.
அழகு சாதன பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் ஜான்சன் அன்ட் ஜான்சன் பொருட்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே பேபி பவுடர் காரணமாக புற்றுநோய் ஏற்பட்டதாக வழக்கு தொடரப்பட்டு நஷ்ட ஈடும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் குழந்தைகளுக்காக தயாரித்து விற்பனை செய்து வரும் பேபி ஷாம்பிலும் கலப்படம் இருப்பது தெரிய வந்துள்ளது. அதைத்தொடர்ந்து ஜான்சன்&ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்த தேசிய குழந்தைகள் நல ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்தச் சொல்லி கடிதம் இந்தியாவின் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரேசங்களில் ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்தி வைக்கக் கோரி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தலைமை செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
ராஜஸ்தான் மாநில அரசு, குழந்தைகளுக்காக பயன்படுத்தப்படும் ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்புவை தனது ஜெய்ப்பூர் மருந்துப் பரிசோதனை ஆய்வகத்தில் சோதனை செய்தது. அதில் தீங்கு ஏற்படுத்தும் வேதிப் பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஆய்வு தொடர்பான அறிக்கையை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் ராஜஸ்தான் அரசு சமர்ப்பித்தது. அதை தொடர்ந்து ராஜஸ்தான் உட்பட அசாம், அருணாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனை நிறுத்திவைக்கப்பட்டது.
ராஜஸ்தான் மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், கடந்த 5ம் தேதி அறிக்கை சமர்ப்பித்தனர். அதில், ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு இரண்டு பகுதிகளாக நடத்தப்பட்ட சோதனைகளில் தோல்வி அடைந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஏற்கனவே ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் மீதும் இதேபோல் சில புகார்கள் வந்தது. இருப்பினும், அரசுத் தரப்பில் நடத்தப்பட்ட சோதனையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என ஜான்சன் ஜான்சன் டிநிறுவனம் சார்பில் கடந்த பிப்ரவரியில் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமான ஜான்சன் அன்டு ஜான்சன் நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் மிகவும் பாதுகாப்பானது என்றும் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறி வருகிறது. இந்தியாவில் செய்யப்படும் சோதனை முறையாக நடத்தப்படவில்லை என்றும் குற்றம் சாட்டி வருகிறது.
ஏற்கனவே ஜான்சன் பவுடர் பயன்படுத்தியதால் பாதிக்கப்பட்டதாக பெண்கள் சிலர் தொடர்ந்த வழக்கில் கடந்த ஆண்டு அமெரிக்க நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பு ஒன்றினை அளித்தது. பாதிக்கப்பட்ட 22 பெண்களுக்கு 32 ஆயிரத்து 545 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகையாக வழங்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.