2025 ஜனவரி 20ம் தேதி அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ளார்.

இந்த பதவியேற்பு விழாவில் தற்போதய அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் இருவரும் கலந்துகொள்ள இருப்பதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது.

2020 அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிப் பெற்ற போது, அதிகாரப்பூர்வமாக தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாத டிரம்ப், பைடனின் பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் 45வது அதிபராக அப்போது பதவி வகித்த டொனால்ட் டிரம்ப் தனக்கு அடுத்த அதிபராகப் பொறுப்பேற்பவரின் பதவியேற்பு வைபவத்தில் பங்கேற்காமல் புறக்கணித்த நான்காவது அதிபர் என்ற அடையாளத்துடன் அமெரிக்க வரலாற்றில் இடம்பிடித்தார்.

தவிர, ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளாமல் வெள்ளை மாளிகையை விட்டு டொனால்ட் டிரம்ப் வெளியேறிய உடன் உலகமே எதிர்பாராத வகையில் அவரது ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

ஆனால், அதனை மனதில் வைத்துக்கொள்ளாமல், டிரம்பின் பதவியேற்பில் பைடன் பங்கேற்பதன் மூலம், வெள்ளை மாளிகையின் பாரம்பரியத்தை அவர் மீண்டும் நிலைநாட்டியுள்ளார்.

அதிபராக யார் வெற்றிப் பெற்றாலும், பதவியேற்பில் பங்கேற்பதென்ற வாக்குறுதியை பைடன் காப்பாற்றுவார் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியுள்ளனர்.