வாஷிங்டன்

புதிய அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றுள்ள ஜோ பைடன் ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக  தொடர்புடையோருக்கு எவ்வித பதவியும் அளிக்கவில்லை.

அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடனின் நிர்வாகத்தில் பல இந்திய அமெரிக்கர்களுக்கு பதவி அளித்துள்ளார்.  இவ்வாறு பதவி அளிக்கப்பட்ட 20 இந்திய அமெரிக்கர்களில் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.  மேலும் இவர்களில் பலர் அமெரிக்காவில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பட்டியல் மற்றும் காஷ்மீர்  ஊரடங்கு, உள்ளிட்டவை9களுக்கு எதிரான பேரணியில் கலந்துக் கொண்டவர்கள் ஆவார்கள்.

அதே வேளையில் ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜகவுக்குத் தொடர்புடையோர் அல்லது வலது சாரி அபிமானிகளான இந்தியர் யாருக்கும் ஜோ பைடன் எவ்வித பதவியும் அளிக்காமல் உள்ளார்.  கடந்த ஒபாமா நிர்வாகத்தில் அதிகாரியாக பணியாற்றிய சோனல் ஷா மற்றும் அமித் ஜானி குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.  இவர்கள் இருவரும் ஜோ பைடனின் தேர்தல் பிரசாரக் குழுவில் இடம் பெற்றிருந்த போதும் நிர்வாகத்தில்  பதவிகள் அளிக்கப்படவில்லை.

ஸ்ரீ பிரஷ்டன் குல்கர்ணி என்னும் அமெரிக்க வாழ் இந்திய வேட்பாளர் பாஜக ஆதரவாளர் ஆவார்.  ஆனால் அவர் இங்குள்ள இந்திய அமைப்புக்களின் கடும் எதிர்ப்பால் தோல்வி அடைந்துள்ளார்.  அது மட்டுமின்றி முன்னாள் உறுப்பினரான துளசி கப்பார்ட் என்னும் பெண்ணும் தற்போதைய தேர்தலில் இதே காரணத்துக்காகத் தோல்வியைத் தழுவி உள்ளார்.  குறிப்பாக பைடனுடன் தேர்தல் பணியாற்றிய சோனல் ஷா என்னும் பெண்மணியின் தந்தை பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.