டில்லி
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் முதல் உரையாடல் விவரத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் கடந்த நவம்பர் மாதம் ஜோ பைடன் வெற்றி பெற்றதையடுத்து இந்தியப் பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதன் பிறகு ஜோ பைடன் அதிபராகப் பதவி ஏற்ற பிறகு நேற்று முதல் முறையாக மோடி அவருடன் உரையாடி உள்ளார். இந்த உரையாடல் விவரங்களை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
அதில், “இன்று அதிபர் ஜோசப் ஆர் பைடன் இந்தியப் பிரதமர் மோடியுடன் உரையாடல் நடத்தினார். அப்போது அமெரிக்கா மற்றும் இந்திய ஆகிய இரு நாடுகளும் கொரோனாவுக்கு எதிரான போரில் இணைந்து பணியாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை மாறுதல் குறித்த பங்கீடுகளைப் புதுப்பிக்கவும் உலக பொருளாதார சீரமைப்புக்காகவும் பயங்கர வாத ஒழிப்புக்காகவும் இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளன.
இரு நாட்டின் தலைவர்களும் வெளிப்படையான இந்தோ பசிஃபிக் நடவடிக்கைகளை இணைந்து நடத்தவும் பயண சுதந்திரம், எல்லை ஒப்புணர்வு போன்றவற்றுக்கு ஆதரவைத் தொடர ஒப்புக கொண்டுள்ளனர். இந்திய அமெரிக்க உறவுகளின் ஜனநாயக மதிப்புக்களைக் காத்து உலக அளவில் ஒரு விதிமுறைகளை உருவாக்க தமக்கு விருப்பம் உள்ளதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும் இருவரும் இணைந்து மியான்மாரில் ஜனநாயக நடவடிக்கைகளை மீண்டும் சட்டரீதியாக எடுத்து வர நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். மேலும் உலக அளவில் அமெரிக்க மற்றும் இந்தியா இணைந்து சந்திக்கும் சவால்களைத் தீர்த்து மக்கள் மற்றும் தத்தம் நாடுகளின் நலனுக்காக ஒன்றிணைந்து பணி புரியவும் இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.