ஸ்ரீநகர்:
புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பயங்கரவாதிகளை வேட்டையாடி வரும் இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர், இன்று அதிகாலை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அனந்த்நாக் அருகே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.
காஷ்மீர் மாநிலத்திற்குள் ஊடுருவ முயலும் பயங்கரவாதிகளை இந்திய ராணுவத்தினர் தடுத்து வருகின்றனர். இதன் காரணமாக எல்லையோரப் பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும் அவ்வப்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி கலகத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் அருகே பிஜ்பெஹாரா நகரம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அந்த இடத்தை இந்திய பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இதனால், அங்கிருந்து தப்பிக்கும் நோக்கில் பயங்கரவாதிகள் இந்திய பாதுகாப்பு படையினர்மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.