ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் இன்று இரண்டு பயங்கரவாதிகள் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புப்படையினர் அறிவித்து உள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் வெகுவாக தடுக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது. மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்து வரும் நிலையில், மீண்டும் சுற்றுலா களைக்கட்டியுள்ளது. இருந்தாலும் அவ்வப்போது பயங்கரவாதிகள் ஊடுவலும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அவர்களை வேரறுக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினரும், ராணுவத்தினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் சிர்ஹாமா பகுதியிலும், குல்காம் மாவட்டத்தில் உள்ள சாகிசமட், டிஹெச் போரா பகுதியிலும் இன்று அதிகாலையில் பாதுகாப்பு படையினர் என்கவுன்டர் நடத்தினர். குல்காமில் நடந்த என்கவுன்டரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும் அனந்த்நாக்கில் நடந்த என்கவுன்டரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தளபதி நிசார் தார் என்பவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் நிலைமையை சமாளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்களுக்காக அனந்த்நாக்கின் சில பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.