லக்னோ:
இந்திய சுதந்திரத்திற்காக தன்னை அர்ப்பணித்தவர் முகமது அலி ஜின்னா என்று, பாகிஸ்தான் பிரிய காரணமாக இருந்த ஜின்னாவை பாஜ பெண் எம்.பி. ஒருவர் புகழ்ந்து பேசினார். இது சலசலப்பை உருவாக்கி உள்ளது.
இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே பாகிஸ்தான் தனி நாடா பிரிந்தது. இதற்கு காரணமாக இருந்தவர் முகமது அலி ஜின்னா. சுதந்திரத்துக்கு முன்பு இவர்,இஸ்லாமியர்களுக்கு தனி நாடு அளிக்க வேண்டும் நடத்திய போராட்டத்தால் தான் இந்தியா இரண்டாக பிரிக்கப்பட்டது என்பது வரலாறு.
இந்த நிலையில் உ.பி.யில் உள்ள அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர் சங்க அறையில் முகமது அலி ஜின்னா படம் ஏற்கனவே இடம் பெற்றுள்ளது. இந்த படத்தை அகற்ற வேண்டும் என்று சமீபத்தில் பாரதியஜனதா கட்சியை சேர்ந்த சதீஷ் கவுதம் எம்.பி சர்ச்சையை ஆரம்பித்து வைத்தார்.
இதன் காரணமாக மாணவர்களுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டு இரண்டாக பிரிந்தனர். ஒரு தரப்பினர் ஜின்னா படத்தை அகற்ற வேண்டும் என்றும், மற்றொரு தரப்பினர் படத்தை அகற்றக்கூடாது என்றும் போராடி வருகின்றனர்.
இதுகுறித்து உபி. மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ. எம்.பி. சாவித்திரி பால் பூலே செய்தியாளர்களுடன் பேசும்போது, நாட்டின் சுதந்திரத்திற்காக தன்னை அர்ப்பணித்தவர் முகமது அலி ஜின்னா என்றும், அவரைப் போன்ற விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்கள் நினைவுகூறத் தக்கவர்கள் என்று புகழாரம் சூட்டினார்.
பாஜ கட்சியை சேர்ந்த ஒரு எம்.பி. ஜின்னாவை வசை பாடிய நிலையில், மற்றொரு எம்பி அவரை புகழ்ந்து பேசியிருப்பது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.