டில்லி,
குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி டில்லியில் யு ஹங்கார் ரேலி என்ற பெயரில் சமூக நீதி பேரணி நடத்தப் போவதாக அறிவித்திருந்தார்,
அவரது பேரணிக்கு டில்லி காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி பேரணி நடைபெறும் என்றும் என்றும் அறிவிக்கப்ட்டுள்ளதால் டில்லியில் பரபரப்பு நிலவி வருகிறது. இதன் காரணமாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
குஜராத் மாநிலம் வத்கம் சட்டசபை தொகுதியில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற தலித் தலைவரான ஜிக்னேஷ் மேவானி, டில்லியில் உள்ள பாராளுமன்றம் எதிரெ உள்ள தெருவில் “சமூக நீதி பேரணி” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேரணி செல்ல திட்டமிட்டு இருந்தார்.
இந்நிலையில் அந்த பேரணிக்கு டில்லி போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால், போலீஸ் தடையை மீறி பேரணி திட்டமிட்டபடி நடைபெறும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கண்ணீர் புகை குண்டுகள் அடங்கிய துப்பாக்கிகள், தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனம், கலவர தடுப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இன்று நடைபெற உள்ள பேரணியில் நாடு முழுவதும் வன்முறைகள் அதிகரித்துள்ளதை கண்டித்தும், வேலைவாய்ப்பை பெருக்க மத்திய அரசு தவறிவிட்டது என குற்றம் சாட்டியும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பேரணிக்க திட்டமிட்டு இருந்தனர்.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த பேரணியில் குஜராத்தின் ஜிக்னேஷ் மேவானி மற்றும் அசாம் விவசாய தலைவர் அகில் கோகாய் ஆகியோர் கலந்து கொண்டு பேச உள்ளனர்.