ராஞ்சி:

ஜார்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டத்தில் மாட்டு இறைச்சியை எடுத்து சென்ற நபர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

அலிமுதீன் என்கிற அஸ்கர் அன்சாரி என்பவர் தடை செய்யப்பட்ட மாட்டு இறைச்சியை மாருதி ஆம்னி வேனில் கொண்டு சென்றார். பஜார்தண்ட் கிராமத்தில் ஒரு கும்பல் வேனை வழிமறித்து தாக்கியது.

அதோடு வேனுக்கும் தீ வைத்தது. இதனால் வேன் முழுவதும் தீயில் கருகி நாசமானது. இதில் படுக £யமடைந்த அன்சாரியை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவமனையில் அவர் இறந்தார்.

‘‘இது முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு கொலை சம்பவமாகும். அன்சாரி மீது ஏற்கனவே குழந்தை கடத்தல் மற்றும் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. சில மாட்டு இறைச்சி வர்த்தகர்ளுக்கு இந்த சதி செயலில் தொடர்பு உள்ளது. கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்’’ என்று கூடுதல் டி.ஜி.பி மாலிக் தெரிவித்தார்.

இதேபோல் கிரிதி மாவட்டத்தில் ஒரு வீட்டில் மாட்டு தலை இருந்ததாக கூறி வீட்டை ஒரு கும்பல் சூறையாடி தீ வைத்த சம்பவமும் நடந்துள்ளது.