ராஞ்சி

ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் பிரபல கிரிக்கெட் வீரருக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களான திவாகர் மற்றும் தாஸ் பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. தோனிப் பெயரை பயன்படுத்தி கிரிக்கெட் அகாடமிகளை திறக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எந்த விதிமுறைகளையும் ஆர்கா நிறுவனம் கடைபிடிக்கவில்லை என்பதால் இந்த ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் 15, 2021 அன்று தோனியால் திரும்ப பெறப்பட்டுள்ளது. தன்னை ஏமாற்றியதாக கடந்த ஜன.5 ஆம் தேதி ராஞ்சி மாவட்ட நீதிமன்றத்தில் இருவர் மீதும் தோனி கிரிமினல் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கில் ஒப்பந்தத்தை ரத்து செய்த பிறகும் தன் பெயரில் அகாடமிகளை திறந்து, ரூ.15 கோடி மோசடி செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.  வழக்கை எதிர்த்து ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் திவாகரும், தாஸும் மனு தாக்கல் செய்தனர். ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் தோனி நேரில் ஆஜராகி தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.