ராஞ்சி
ஜார்க்கண்ட் மாநில அரசுக்கு எதிராக ஆதிவாசிகள் தனி வங்கி, ஆதிவாசிகள் கல்வி வாரியம், சுகாதார வாரியம் மற்றும் பாதுகாப்பு வாரியம் ஆகியவற்றை ஒரு அமைப்பினர் அமைத்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள குந்தி மாநிலத்தில் ஆதிவாசிகள் எண்ணிக்கை அதிகம் உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆதிவாசிகள் நலனுக்கு ஒதுக்கப்படும் நிதி சரியான முறையில் செலவிடப்படுவதில்லை என இங்குள்ள ஆதிவாசிகள் குறை கூறுகின்றனர். அதை ஒட்டி அரசுக்கு எதிராக பதல்கிரி என ஒரு தனி நிர்வாக அமைப்பை இவர்கள் நிறுவி உள்ளனர். இந்தப் பகுதிகளில் உள்ள கிராம சபைகள் ஒன்று சேர்ந்து இந்த தனி நிர்வாக அமைப்பை நடத்த துவங்கி உள்ளனர்.
பதல்கிரி அமைப்பினர் தங்களுக்கு என தனி கல்வி வாரியம், சுகாதார வாரியம், மற்றும் பாதுகாப்பு வாரியம் அமைத்துள்ளனர். அவர்களுடைய நிதி உதவிக்காக தனி வங்கி ஒன்றை நேற்று தொடங்கி உள்ளனர். அந்தப் பகுதி மக்களின் குருவான ஜோசப் புர்ட் என அழைக்கப்படும் யூசுப் புர்தி இந்த வங்கியை நேற்று அவர்கள் முறைப்படி பூஜை நடத்தி தொடங்கி வைத்தார். முதல் நாளான நேற்று 100 பேர் கணக்கு துவங்கி உள்ளனர். அவர்களுக்கான கணக்கு புத்தகத்தை மத குரு அளித்துள்ளார்.
அப்போது மதகுரு, ”தனி வங்கியை தொடங்கியதில் கிராம சபையின் தவறு எதுவும் இல்லை. இங்குள்ள ஆதிவாசி மக்களின் முன்னேற்றத்துக்காக இது தொடங்கப்பட்டுள்ளது. அரசின் ஆதிவாச நலநிதியை இந்த வங்கியில் செலுத்தி வங்கியை நடத்த திட்டமிட்டுள்ளோம். தற்போதைக்கு இந்திய அரசின் ரூபாய் நோட்டுக்களை உபயோகப்படுத்த உள்ளோம். விரைவில் எங்களுடைய சொந்த ரூபாய் நோட்டுக்களை உபயோகிக்க திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில அரசு இந்த பதல்கிரி அமைப்புக்கு செய்தித்தாள்கள் விளம்பரம் மூலம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு முன்பு அரசு இந்த பதல்கிரி அமைப்பை சார்ந்த தலைவர்கள் சிலரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.