சென்னை :
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் ஜெ.வின் கைரேகை வைக்கப்பட்டிருந்தது.
இந்த கைரேகை பெற்ற மருத்துவர் பாலாஜி, தமிழக சுகாதாரத்துறை செயலாளரின் வாய்மொழி உத்தரவின் படியே கைரேகை பெறப்பட்டதாக கூறியிருந்தார். இதற்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே இதுகுறித்த வழக்கு உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஜெ. மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் விசாரணை ஆணையத்தில், திமுகவை சேர்ந்த மருத்துவர் சரவணன் கொடுத்த புகாரை தொடர்ந்து, ஜெ.விடம் கைரேகை பெற்ற மருத்துவர் பாலாஜியிடம் விசாரணை நடத்தி வருகிறது.
நேற்று 3 முறையாக விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து மருத்துவர் பாலாஜி, ஜெ.விடம் கைரேகை பெற தனக்கு யாரும் எழுத்துப்பூர்வமான உத்தரவு வழங்கவில்லை என்றும், சுகாதாரத்துறை செயலாளரின் வாய்மொழி உத்தரவின் பேரிலேயே பதிவு செய்யப்பட்டதாக கூறி இருந்தார்.
இது மேலும் சர்ச்சையை உருவாக்கியது. இதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தான் அப்படி எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்க வில்லை மறுப்பு தெரிவித்துள்ளார்.
“மருத்துவர் பாலாஜி கூறியதை தான் முழுவதும் கேட்ட பிறகே விளக்கம் அளிக்க முடியும்” என்று ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இந்நிலையில் மருத்துவர் பாலாஜி தற்போது, தானாகவே பதிவு செய்தேன் என்று பல்டி அடித்துள்ளார்.