அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யிலுள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் ஜெட் விமானம் ஒன்று தரையிறங்கும் போது அமெரிக்க ராணுவத்தின் ப்ளாக் ஹாக் ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
60 பயணிகளுடன் தரையிறங்க தயாரான அந்த ஜெட் விமானத்தில் 4 பணியாளர்கள் உட்பட மொத்தம் 64 பேர் பயணம் செய்துள்ளனர். தவிர, ஹெலிகாப்டரில் 3 ராணுவ வீரர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
போடோமேக் ஆற்றின் மீது நிகழ்ந்த இந்த விபத்தை அடுத்து ஆற்றில் மூழ்கி தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இரவு நேரம் என்பதால் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தை அடுத்து வாஷிங்டன் டி.சி. விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் பறப்பது மற்றும் தரையிறங்குவது அதிகாலை 5 மணி வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “இந்த பயங்கரமான விபத்து குறித்து தனக்கு முழுமையாக விளக்கமளிக்கப்பட்டது” என்றும், பயணிகளைப் பற்றி குறிப்பிடுகையில், “கடவுள் அவர்களின் ஆன்மாக்களை ஆசீர்வதிக்கட்டும்” என்றும் கூறியுள்ளார்.