புதுடெல்லி: திவாலாகும் நிலையிலுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை எடுத்துக்கொள்ள சம்மதித்த, அந்நிறுவன ஊழியர்களில் ஒரு குழுவினர், செயல்திட்டம் குறித்து விவாதிப்பதற்காக, எஸ்பிஐ வங்கி அதிகாரிகளை சந்தித்துள்ளனர்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிச்சயமற்ற சூழல் குறித்து இரண்டு தரப்பினருமே ஒப்புக்கொண்ட நிலையில், ஏல செயல்பாடு முடிந்த பிறகுதான், செயல்திட்டம் குறித்து பரிசீலிக்கப்படும் என்று, வங்கி அதிகாரிகள், ஜெட் ஏர்வேஸ் ஊழியர் குழுவினரிடம் தெரிவித்தனர்.
ஏல செயல்பாடு முடிவடைந்த பின்னரே, வேறு ஏதேனும் வாய்ப்புகள் அல்லது செயல்திட்டங்கள் மற்றும் நிலை குறித்து கடன் கொடுத்தவர்கள் மதிப்பாய்வு செய்வார்கள் என்று எஸ்பிஐ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பில், இந்திய விமானிகள் நலச் சங்கம் மற்றும் ஜெட் விமான பராமரிப்பு பொறியாளர்கள் நலச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் பங்கேற்றார்கள்.
தேர்வுசெய்யப்பட்ட ஏலம் எடுப்போர்கூட, விமானப் போக்குவரத்தை தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்ற ஊகங்கள் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.