கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை நடத்திவரும் தேவகவுடாவுக்கு- இது சோதனைக்காலம் என்றுதான் சொல்ல வேண்டும்.
பேரன் நிகில் நிற்கும் மாண்டியா தொகுதியில் அவரை கொத்திச்செல்ல- ராஜாளி பறவையாக ‘திசை மாறிய பறவைகள்’ சுமலதா உருவெடுத்திருப்பது பெரும் சோதனை.
அவரை பா.ஜ.க.வேறு ஆதரிக்கும் முடிவில் இருக்க- தூக்கம் தொலைந்து போன கவுடாவுக்கு இன்னொரு முக்கிய பிரச்சினை.
காங்கிரசிடம் சண்டை போட்டு தொகுதிகளை வாங்கிய மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு மூன்று தொகுதிகளில் போட்டியிட ஆட்கள் கிடைக்கவில்லை.
அந்த தொகுதிகள்- உடுப்பி –சிக்மகளூரு.. உத்தர கன்னடா. பெங்களூரு வடக்கு.
இந்த மூன்று தொகுதிகளையும் கூட்டணி கட்சியான காங்கிரசிடம் வாங்கியாகிவிட்டது.
ஆனால் அங்கே மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு வேர்கள் இல்லை. தகுதியான வேட்பாளர்களும் இல்லை. இதனால் 3 வேட்பாளர்களை காங்கிரசிடம் இருந்து கடன் வாங்கியுள்ளது.
உடுப்பி-சிக்மகளூருக்கு பிரமோத் மாதவராஜ்,பெங்களூரு வடக்கு தொகுதிக்கு சங்கர் ஆகியோரை ‘கடன்’கொடுத்துள்ளது- காங்கிரஸ்.
அவர்கள் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்களாக- அதன் சின்னத்தில் போட்டியிடுவார்கள்.
உத்தரகன்னடா தொகுதியில்- பிரசாந்தை ‘கடன்’ கொடுத்தது-காங்கிரஸ்..ஆனால் அவரது தந்தையான வருவாய்த்துறை அமைச்சர் தேஷ்பாண்டே இந்த விளையாட்டுக்கு ஒத்து கொள்ளவில்லை.
இதனால் –அந்த தொகுதியில் நிவேதித் ஆல்வா என்ற காங்கிரஸ் காரர் நிறுத்தப்படுவார்.
டெல்லி மேலிடம் இந்த கொடுக்கல்-வாங்கலுக்கு பச்சை கொடி காட்டி விட்டது.
–பாப்பாங்குளம் பாரதி