கௌதம் கம்பீரை தொடர்ந்து தேர்தல் அரசியலில் இருந்து வெளியேறுவதாக பாஜக எம்.பி. ஜெயந்த் சின்ஹா அறிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் தொகுதி எம்.பி.யாக உள்ள ஜெயந்த் சின்ஹா முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின் மகன் என்பதும் 2014ம் ஆண்டு மத்திய நிதித்துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் விளையாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்துவதற்காக தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக கிழக்கு டெல்லி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கௌதம் கம்பீர் இன்று காலை அறிவித்தார்.
இந்த நிலையில் கால நிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் இந்திய அளவிலும் உலக அளவிலும் செயலாற்ற உள்ளதை அடுத்து தேர்தல் அரசியலில் இருந்து தான் விலக இருப்பதாக பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா-வுக்கு ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
கட்சியில் இருந்து மூத்த எம்.பி.க்களை ஓரம் கட்டிவிட்டு இளைஞர்களை தேர்தல் களத்தில் இறக்க மோடி – அமித் ஷா கூட்டணியிலான பாஜக தலைமை தீர்மானித்துள்ள நிலையில் எம்.பி.க்கள் ஒவ்வொருவராக தேர்தல் அரசியலில் இருந்து வெளியேறுவதாகக் கூறியுள்ளது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மற்றும் வடமாநிலங்களில் நடைபெற்று வரும் விவசாய போராட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் கட்சியினர் வழங்கும் ஆலோசனைகளை புறம்தள்ளிவிட்டு மோடி – அமித் ஷா கூட்டணி தான் தோன்றித்தனமாக செயல்படுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்துவருகிறது.
மேலும், முக்கிய தலைவர்கள் அரசியல் ஸ்டண்டுகள் மூலம் கரை சேர முயற்சி மேற்கொண்டாலும் மற்ற வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலைமையை சமாளிக்க கடினமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாஜக-வில் உட்கட்சி ஜனநாயகம் முற்றிலும் அழிந்துவருவதால் மோடி – அமித் ஷா கூட்டணிக்கு எதிரான எந்த ஒரு கருத்தும் கட்சியின் வளர்ச்சிக்கு எதிரான கருத்தாகவே பார்க்கப்படுவதுடன் அத்தகைய கருத்தை கூறுபவர்கள் கட்சியில் இருந்து ஓரம்கட்டப்படுகின்றனர்.
ஏற்கனவே பாஜக-வின் ஒட்டுமொத்த கட்டுப்பாடு மட்டுமன்றி அரசுத்துறையின் அனைத்து நிர்வாகமும் குஜராத்தைச் சேர்ந்தவர்களிடம் சென்று விட்டதாக வடமாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் குமுறிவரும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராக தேர்தல் அரசியலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருப்பது கட்சியில் உள்ள அதிருப்தியை வெளிப்படுத்துவதாகவே உள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்,