சென்னை:
“மனிதநேயம் இருக்கும் இடத்தில் அறம் செழிக்கும், ஏழ்மை விலகும், நன்மை பெருகும்” என்று இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
அதிமுக சார்பில் கடந்த 20 ஆண்டுகளாக இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று சென்னை நந்தம்பாக்கம் வணிக மையத்தில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
“எங்கு மனிதநேயம் இருக்கிறதோ அங்கு ஒற்றுமை நிலவும். மனிதநேயம் இருக்கும் இடத்தில் அறம் செழிக்கும், ஏழ்மை விலகும், நன்மை பெருகும். இறைப்பற்றுள்ளவர்களை எந்த துன்பமும் அணுகாது. எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு அறம் செழிக்கும்.
நோன்பு இருப்பவர்களுக்கு இறைவனே நேரடியாக உதவி செய்கிறார். இறைவனே நேரடியாக பலன் தரும் இந்த ரமலான் நோன்பு மிகவும் வலிமையும், புனிதமும் கொண்டது. ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதால் அகமும், புறமும் தூய்மையடைகிறது” – இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு தலைமை ஹாஜி, தமிழக அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் உள்ளிட பலர் பங்கேற்றனர்.
கடந்த வருடம் ஜூலை 1-ம் தேதி இதே இடத்தில் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.