சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 28 வகையிலான பொருட்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கர்நாடக நீதிமன்ற வழக்கறிஞர் கோரியிருந்த நிலையில், அந்த பொருட்கள் ஜெயலலிதாவின்  நாமினியிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

சமூக ஆர்வலர் ஒருவர் இது தொடர்பாக ஆர்டிஐ மூலம் கேட்ட கேள்விகளுக்கு தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதில் அளித்துள்ளனர். அதில்,  “நீதிமன்ற ஆவணத்தில் பட்டியலிடப்பட்ட பொருட்கள் ஜெயலலிதாவின் நாமினியான பாஸ்கரனிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவரது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வைரம், வைடூரிம் உள்பட 28 வகையான பொருட்கள், வழக்கு நடந்த மாநிலமான கர்நாடகாவில் உள்ள அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டு இருந்தன.

வழக்கு முடிந்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட நிலையில், ‘ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில், விலை உயர்ந்த புடவைகள், சால்வைகள், செருப்புகள் உட்பட, 28 வகையான பொருட்களை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை, கர்நாடக அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும்’ என,  சமூக ஆர்வலர்  தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட, கிரண் ஜவளி என்ற அரசு வக்கீலை, கர்நாடக அரசு நியமித்தது.

இதற்கிடையில், ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபா, தீபக் ஆகியோர், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி, சிறப்பு நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது நீதிபதி மோகன் முன்னிலையில் சமீபத்தில் விசாரணை நடந்தது. அப்போது, ‘பறிமுதல் செய்த பட்டியலில் 29 வகையான பொருட்கள் உள்ளன. ‘இதில், வரிசை எண் 28ல் உள்ள தங்கம், வைரம், வைடூரியம், பவளம், முத்து உட்பட 30 கிலோ நகைகள் மட்டுமே உள்ளன. மற்ற பொருட்கள் இல்லை’ என நீதிபதி தெரிவித்து, விசாரணையை  ஒத்தி வைத்தார்.

இதையடுத்து, பறிமுதல் செய்த பட்டியலில் உள்ள மற்ற 28 வகை பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி, சென்னை ஆலந்துாரில் உள்ள தமிழக லஞ்ச ஒழிப்பு இயக்கு னரக எஸ்.பி.,க்கு, சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி கடிதம் எழுதி இருந்தார். அதில்,  30 சவரன் நகைகள் தவிர மற்றவை கர்நாடக நீதிமன்றத்தில் இல்லை எனவும் ஏற்கனவே இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட விலை மதிப்புடைய கடிகாரம், 11 ஆயிரம் புடவைகள், பரிசு பொருட்கள் உட்பட 28 பொருட்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்  என கோரிக்கை வைத்திருந்தார்.

இதற்கு பதில் அளித்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை, கர்நாடக வழக்கறிஞருக்கு பதில் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்  நரசிம்ம மூர்த்தி, ஜெயலலிதாவின் 28 வகையான பொருட்கள் எங்கே, யாரிடம் உள்ளது என தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள தமிழ்நாடு தகவல் ஆணையம், “நீதிமன்ற ஆவணத்தில் பட்டியலிடப்பட்ட பொருட்கள் ஜெயலலிதாவின் நாமினியான பாஸ்கரனிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது  என தெரிவித்து உள்ளது.

28 வகையான பொருட்கள் விவரம்:

1.பட்டுப்புடவைகள்-11,344

2.குளிர்சாதன எந்திரங்கள்-44

3.தொலைபேசிகள்-33

4.சூட்கேசுகள்-131

5.கைக்கெடிகாரங்கள்-91

6.சுவர்கெடிகாரங்கள்-27

7.மின்விசிறிகள்-86

8.அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகள்- 146

9.டீப்பாய்கள்-34

10.மேஜைகள்-31

11.மெத்தைகள்-24

12.உடை அலங்கார டேபிள்கள்-9

13.அலங்கார தொங்கும் மின்விளக்குகள்-81

14.ஷோபா ஷெட்டுகள்-20

15.செருப்புகள்-750 ஜோடிகள்

16.உடை அலங்கார டேபிள் கண்ணாடிகள்-31

17.மதுபானம் அருந்தும் கண்ணாடி டம்ளர்கள்-215

18.இரும்பு பெட்டகங்கள்-3

19.சால்வைகள்-250

20.குளிர்பதன பெட்டிகள்-12

21.டி.விக்கள்-10

22.வி.சி.ஆர்.கள்-8

23.வீடியோ கேமரா-1

24.சி.டி.பிளேயர்கள்-4

25.ஆடியோ பிளேயர்கள்- 2

26. ரேடியோ பெட்டிகள்-24

27.வீடியோ கேசட்டுகள்-1,040

28. 700 கிலோ வெள்ளி பொருட்கள்.

ஜெயலலிதாவுடன் தொடர்பில் இருந்தவர்களில் பாஸ்கரன் என்பவர் டி.டி.வி.தினகரனின் சகோதரர் ஆவார்.  இன்னொருவர் அவரது உறவினரின் பையன். இவர் படத்தில் நடிப்பதாக எல்லாம் தகவல்கள் பரவியது. பின்னர் என்ன ஆனால் என்றே தெரியவில்லை. தமிழக லஞ்ச ஒழிப்பு துறை,  இரு பாஸ்கரனிடமும் ஜெயலலிதாவின் 28 வகையான பொருட்கள் ஒப்படைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அப்படியானால், ஜெயலலிதாவின்  28 வகையான பொருட்களை பெற்ற பாஸ்கரன் யார்? என்ற கேள்வி எழுந்தது . இந்த நிலையில், ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பாஸ்கரன் என்பவரிடம்தான் 28 வகையான பொருட்களும் ஒப்படைக்கப்பட்டதாக ஜெயலலிதா தரப்பு வக்கீல் ஒருவர் தெரிவித்துள்ளார். இது மர்மமாகவே உள்ளது.