சென்னை:
சென்னை போயஸ் கார்டனில் 24,422 சதுர அடி பரப்பளவு கொண்ட வேதா இல்லத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்து வந்தார். அவர் வாழ்ந்த வீட்டை நினைவிடமாக்க மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, தமிழக சட்டப்பேரவையில் தீர்மனமும் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், 24,322 சதுர அடிக்கு மொத்தம்
ரூ. 68 கோடியை தமிழக அரசு டெபாசிட் செய்துள்ளது. அதாவது, ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கி ரூ.36.9 கோடியும், வாரிசுகள் தீபா, தீபக்கிற்கு ரூ.29.3 கோடியும் அரசு டெபாசிட் செய்துள்ளது. நினைவு இல்லமாக மாற்ற அரசு இழப்பீட்டுத் தொகையை செலுத்தியது மூலம் அரசுடைமையானது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் வீட்டில் இருக்கும் அசையா சொத்துக்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவரது வீட்டில் 8,376 புத்தகங்கள், 4.37 கிலோ தங்கம், 601.4 கிலோ வெள்ளி, 38 ஏசிக்கள், 394 நினைவு பரிசுகள், 11 டிவிக்கள், 6,514 சமையல் பாத்திரங்கள், 556 மரச்சாமான்கள், 108 அழகு பொருட்கள், 29 செல்போன்கள், 15 பூஜை பொருட்கள், 10 ஃபிரிட்ஜ், 6 கடிகாரங்கள், 10,438 ஆடைகள் உள்பட 32,700 அசையும் சொத்துக்கள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.