சென்னை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் காலக்கெடு அடுத்த மாதம் (ஜூன்) 24ந்தேதி உடன் முடிவடைய உள்ளதால்,  விசாரணை கமிஷனின் கால அவகாசம் மேலும் சில மாதம் நீட்டிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ந்தேதி மரணம் அடைந்தார். அவரது மரணத்தில்பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. இதையடுத்து,  ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் 25 ம் தேதி அமைத்தது.

அப்போது, ஜெ. மரணம் குறித்து 3 மாதத்துக்குள் விசாரணையை முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், விசாரணை வளையம் விரிவடைந்துகொண்டே சென்றதால், விசாரணை ஆணையம் சார்பில் 6 மாத கால அவகாசம் கேட்டது. கால அவகாசத்துக்கு தமிழக அரசும் ஒப்புதல் அளித்தது.

தற்போது அதற்கான காலஅவகாசம் வரும் ஜூன் மாதம் 24 ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

இதற்கிடையில் ஜெ. மரணம் குறித்து விசாரணை ஆணையம் இதுவரை 40க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளது. சசிகலாவிடம் இன்னும் நேரடியாக விசாரணை நடத்தவில்லை.  மேலும், ஜெயலலிதா, சசிகலா தொடர்புடையவர்கள், உறவினர்கள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள், தலைமை செயலாளர்கள்,  விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

ஜெயலலிதாவின் உறவினர்கள் தீபா, அவரது கணவர் மாதவன், வீட்டு பணியாளர்கள், ஜெயலலிதாவுக்கு செயலாளர்களாக இருந்தவர்கள், வீட்டு வேலைக்கார்கள்  என விசாரணையை மேற்கொண்டது. மேலும் சசிகலாவின் வாக்குமூலத்தையும் ஆணையம் பெற்றுள்ளது.  மேலும் சசிகலா தரப்பில் குறுக்கு விசாரணையும் நடைபெற்றது.

இதற்கிடையில்  அப்பல்லோ தரப்பில் ஜெ.வுக்கு வழங்கப்பட்ட மருத்துவ ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. அப்பல்லோ கொடுத்துள்ள மருத்துவ ஆவனங்கள் குறித்து ஆராய மருத்துவ குழு அமைக்க தமிழக அரசை விசாரணை ஆணைய நீதிபதி கேட்டுள்ளார்.

மேலும், திமுகவைச் சேர்ந்த மருத்துவர் சரவணன் கூறிய குற்றச்சாட்டை உறுதி செய்வதற்கு ஜெயலலிதாவின் கைரேகை, தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் இன்னும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த  எய்ம்ஸ் மருத்துவர்களிடமும், பிசியோதெரபி சிகிச்சை அளித்த சிங்கப்பூர் மருத்துவர்களிடமும்  இன்னும் விசாரணை நடைபெறவில்லை.

இந்த சூழலில் இதுவரை நடைபெற்ற விசாரணையை கொண்டு, விசாரணை ஆணையம் அறிக்கை தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இன்னும்  பலரிடம் விசாரணை பாக்கி உள்ள நிலையில், விசாரணை ஆணையம் இத்தோடு முடித்துக்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமா? அல்லது முழுவதும் விசாரணை செய்ய மேலும் கால அவகாசம் கோருமா? என்பது அடுத்த மாதம்தான் தெரிய வரும்.