இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்ட பிரபலங்களின் பெயரில் விண்ணப்பங்கள் வந்ததை அடுத்து பிசிசிஐ தேர்வுக் குழு குழப்பமடைந்துள்ளது.
“அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் வெற்றிபெறக் கூடிய உலகத் தரம் வாய்ந்த இந்திய கிரிக்கெட் அணியை உருவாக்கவும், விளையாட்டு வீரர்களைக் கையாள்வதில் திறமையும்” உள்ளவர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதிவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது.
கூகுள் பார்ம் மூலம் ஆன்லைனில் பெறப்பட்ட இந்த விண்ணப்பங்கள் மே 27ம் தேதி (நேற்று) நிறைவு பெற்றது.
இதில் 3000க்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இதில் பாதிக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் போலியானவை என்று தெரியவந்துள்ளது.
சச்சின் டெண்டுல்கர், தோனி, நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பெயரில் இந்த போலி விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு 5000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்த நிலையில் அதில் பெரும்பாலானவை போலி என கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆண்டும் இதேபோல் போலி விண்ணப்பங்கள் குவிந்திருப்பதை அடுத்து இதனை தவிர்ப்பது குறித்து பிசிசிஐ குழம்பிபோயுள்ள நிலையில் இதுகுறித்து பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா உடன் ஆலோசிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.