டோக்கியோ:

ஜப்பானில் வெளிவரும் ‘சென்தகு’ என்ற இதழில் இந்தியாவில் செயல்படுத்தப்படவுள்ள புல்லட் ரெயில் திட்டம் குறித்து ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

அதில்,‘‘ இந்த திட்டம் ஒரு மோசடி திட்டம். பணம், நேரத்தை வீணடிக்கும் திட்டம் என்று குறிப்பிட்டுள்ளது. ரூ.88 ஆயிரம் கோடி கடன் மூலம் மும்பை&அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 1 சதவீத வட்டியுடன் 50 ஆண்டுகளில் இந்த கடனை திருப்பி செலுத்த வேண்டும். ஜப்பானில் புல்லட் ரெயில் ‘ஷின்கான்சென்’ சிஸ்டம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த சிஸ்டம் தான் தற்போது ஜப்பானுக்கு அடுத்து இந்தியாவில் செயல்படுத்தப்படவுள்ளது. ஏற்கனவே இந்த திட்டம் ஜப்பான் அரசு மற்றும் இதில் தொடர்புள்ள தொழில் நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இதற்கான செலவுத் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஜப்பான் மக்களின் வரிப்பணம் புல்லட் ரெயில் திட்டத்தில் வீணடிக்கப்பட்டுள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், அந்த கட்டுரையில், ‘‘இந்தியாவில் இந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவது பெரும் பிரச்னையாகும். இது திட்டத்தின் செலவை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மகாராஷ்டிராவில் போராட்டம் நடத்திய ஆயிரகணக்கான விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படும்.

இந்த சமயத்தில் புல்லட் ரெயில் திட்டத்துக்கு நிலம் வழங்குவோருக்கு பணம் கொடுப்பது என்பது சிரமமான காரியமாகிவிடும். அதோடு, புல்லட் ரெயில் திட்ட ஒப்பந்தத்தில் நில உரிமையாளர்களின் விருப்பம் முழு அளவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படடுள்ளது. இதில் ஏதும் பிரச்னை ஏற்பட்டால் போராட்டங்கள் வெடிக்கும். 2022ம் ஆண்டில் புல்லட் ரெயிலை இயக்க வேண்டும் என்ற மோடி அரசின் திட்டத்துக்கு மகாராஷ்டிரா அரசின் நிதி நெருக்கடி இடையூறாக அமைந்துவிடும்’’ என்று தெரிவித்துள்ளது.

‘‘மொத்தம் உள்ள 505 கி.மீ., தூர ரெயில் பாதையில் 28 சதவீதம் அதாவது 144 கி.மீ தூரம் மட்டுமே ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதர தொலைவு முழுவதும் கையகப்படுத்தப்படும் நிலத்தில் தான் ரெயில் பாதை அமைக்க வேண்டும். ஜப்பான் வழங்கும் கடனில் நிலம் கையகப்படுத்தும் செலவுத் தொகை சேர்க்கப்படவில்லை. அதை இந்தியா தான் பார்த்துக் கொள்ள வேண்டும். ஷின்கான்சென் சிஸ்டம் முழுக்க முழுக்க விபத்தில்லா திட்டமாக குறைந்த வட்டி விகிதத்தில் செயல்படுத்தப்படுகிறது.

இதற்கு பரிகாரமாக இந்தியாவில் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து அதிவிரைவு ரெயில் திட்டங்களை ஜப்பானுக்கு தான் அளிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ரெயில்களில் சமீபத்தில் ஏற்பட்டு வரும் தொழில்நுடப் கோளாறு பெரிய பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் எதிர்கால ஒப்பந்தங்கள் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. அதனால் எதிர்கால ஒப்பந்தங்களில் ஐரோப்பியா நாடுகள் மற்றும் சீனாவும் கலந்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இது புல்லட் ரெயிலில் அதிக அளவில் முதலீடு செய்துள்ள ஜப்பானின் அரசு மற்றும் தனியார் துறைக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது’’ என்று அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.