உலகம் முழுவதும் பயணம் செய்து, உள்ளூர் பாலியல் தொழில் மற்றும் அங்குள்ள ஆபத்தான இடங்கள் பற்றிய வீடியோக்களை பதிவிடுபவர் ஜப்பானிய யூடியூபரான “முடேகி (இன்வின்ஸிபிள்) லியோ”.

28 வயதான முடேகி லியோ, ஜப்பானின் ஹோன்ஷூ பகுதியில் உள்ள கிஃபு கிராமத்தைச் சேர்ந்தவர் தனது கல்லூரிப் படிப்பு முடியும் வரை அந்த கிராமத்தை விட்டே அதிகம் வெளியில் செல்லாத அவர் தனது படிப்பு முடிந்ததும் டோக்கியோ நகரில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியை துவங்கினார்.

ஜப்பானின் சிகப்பு விளக்கு பகுதி

அதுவரை வெளியூர்களுக்கு செல்பவர்கள் அதுகுறித்து பதிவிடும் வீடியோக்களை மட்டுமே பார்த்து வந்த லியோ முதல்முறையாக தனது பல்கலைக்கழகப் படிப்பின் போது இந்தியாவின் புது டெல்லி வந்துள்ளார்.

ஜப்பானில் நேரம் தவறாமை, சுத்தம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பண்புகளை கடைப்பிடித்து வந்த லியோ முதல்முறையாக இதற்கு நேர் மாறாக அசுத்தமான, பேருந்து, ரயில்கள் விமானங்கள் என்று அனைத்தும் தாமதமாக வருவது மற்றும் புறப்படுவதைப் பார்த்து உலகில் இப்படியும் இருக்குமா என்று அதிசயித்துள்ளார்.

பின்னர், வேலைக்கு போக துவங்கிய நிலையில் கொரோனா காலகட்டத்தில் வெளியூர்களுக்கு செல்ல துவங்கிய அவர் பல்வேறு நாடுகளுக்குச் சென்று அங்குள்ள போக்குவரத்து, கலாச்சாரம் மற்றும் உணவு முறை என பலவற்றை படம்பிடித்ததோடு அவற்றை தனது யூ-டியூபிலும் பதிவிட துவங்கினார்.

தவிர, தான் செல்லும் இடங்களில் உள்ள சிகப்பு விளக்கு பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள பாலியல் தொழிலாளர்கள் குறித்தும் படம்பிடித்து பதிவிட்ட இவருக்கு அதிகளவிலான ஸப்ஸ்க்ரைபர்கள் குவியத் துவங்கினர்.

தாய்லாந்து, ஆம்ஸ்டர்டாம், கிரீஸ், ஜெர்மனி, பஹர்கஞ் (புது டெல்லி) என உலகின் முக்கிய சிகப்பு விளக்கு பகுதிகளுக்குச் சென்று படமெடுத்த போதிலும் அதில் உள்ள காட்சிகள் மற்றும் அடல்ட் ஒன்லி கன்டென்ட்களுக்காக அதிகளவு விளம்பரங்கள் இல்லாததால் வருமானம் குறைவாகவே பெறுகிறார்.

இருந்தபோதும் இவரது வீடியோக்களை மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் பார்த்து ரசிக்கின்றனர்.

இதுகுறித்து கூறும் லியோ, “எனது வீடியோக்களைப் பார்ப்பவர்கள் ஒரு அறிமுகமில்லாத உலகத்தைப் பற்றி கற்றுக்கொண்டார்கள் என்று நினைக்க வேண்டும்.

அதற்காகவே நான் யூடியூப்பில் இருக்கிறேன், வீடியோக்கள் மூலம் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறித்தனமான எண்ணம் எதுவும் எனக்கு இல்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் ஜப்பானின் கழிவறைகளைப் போன்ற சுகாதாரமான ஒன்றை உயர் ரக ஹோட்டல்களில் கூட நான் இதுவரை கண்டதில்லை, வெளிநாட்டு பயணத்தின் போது இதுபோன்ற அசௌகரியத்தை நாளுக்கு நாள் சகித்துக்கொள்வது மனதளவில் சோர்வாக இருப்பதாகவும், தனது நாட்டிற்கு திரும்பியதும் முதல் வேலையாக ஜப்பானிய சூடான கழிப்பறை இருக்கையைத் தேடி ஓடுவேன் என்றும் ஜப்பானிய ஊடகம் ஒன்றில் அவர் கூறியுள்ளார்.