டோக்கியோ:

ஜப்பானில் வாலிபர் ஒருவர் தனது அடுக்குமாடி குடியிருப்பில் 9 பேரைக் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சிறிய குளிர்சாதன பெட்டிகளில் அடைத்து வைத்திருந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவைச் சேர்ந்தவர் அய்க்கோ தமுரா (வயது 23). சில தினங்களுக்கு முன் இவர் மாயமானார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர் காணாமல் போவதற்கு சில நாட்களுக்கு முன் தனது டுவிட்டரில் ‘‘யாருடனாவது சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள விரும்புவகிறேன்’’ என்று தெரிவித்திருந்ததைக் போலீசார் கண்டறிந்தனர். அதற்கு வாலிபர் ஒருவர், ‘‘நாம் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம்’’ என்று பதிலளித்திருந்தார்.

டகாஹிரோ சிரைஷி (வயது 27) என்ற அந்த வாலிபரை கடந்த மாத இறுதியில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரது அடுக்குமாடி குடியிருப்பை போலீசார் சோதனையிட்டனர்.

அங்கு சிறிய அட்டைப் பெட்டிகளிலும், சிறிய குளிர்சாதன பெட்டிகளிலும் வெட்டப்பட்ட கை, கால்கள், தலை உள்ளிட்ட மனித உடல் பாகங்கள் அடைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வகையில் 240 எலும்புகள் கைப்பற்றப்பட்டன.

இந்த உடல் பாகங்கள் 8 பெண்கள், ஒரு ஆணுக்கு உரியது என்று டி.என்.ஏ பரிசோதனை மூலம் தெரியவந்தது. இவர்களில் 3 பெண்கள் பள்ளி மாணவிகள். அவர்களில் ஒரு பெண்ணின் காதலனும் இற ந்தவர்களில் ஒருவர். இதர அனைவரும் இளம் வயதினர்.

பணத்துக்காகவும், பாலியல் சுகத்துக்காகவும் கொடூர கொலைகளை செய்ததாக டகாஹிரோ சிரைஷி வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் முதல் அக்டோபர் இறுதி வரை இந்த கொலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் ஜப்பானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.