டோக்கியோ: ஜி7 நாடுகளின் தலைவர்கள், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை திட்டமிட்டபடி நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர் என்றுள்ளார் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபி.
அதேசமயம், ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைப்பது தொடர்பான சாத்தியம் குறித்து யாரேனும் ஒரு தலைவர் பேசினாரா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கூறாமல் நழுவினார் ஜப்பான் பிரதமர்.
தற்போது உலகையே நடுங்க வைத்திருக்கும் கொரோனா வைரஸால், ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிப்போகுமா? என்ற கேள்வி மேலோங்கிவரும் நிலையில், ஜப்பான் பிரதமரின் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது.
உள்நாட்டில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் வாயிலாக, பெரும்பாலான ஜப்பானியர்கள், ஒலிம்பிக் நிகழ்வு தள்ளிப்போகும் என்றே நம்புவதாக தெரியவருகிறது.
அதேசமயம், ஒலிம்பிக் ஜோதியின் ரிலே, ஏற்கனவே திட்டமிட்டபடி இம்மாத இறுதியில் துவங்கவுள்ளதாக, டோக்கியோ ஏற்பாட்டு கமிட்டியின் சிஇஓ டோஷிரோ முட்டோ தெரிவித்தார். ஆனால், அதன் சில பகுதிகள் பொதுமக்களுக்கு மூடப்பட்டு, சில நிகழ்ச்சிகளும் ரத்துசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.