டோக்கியோ, 

ப்பானில் பெய்து வரும் பருவமழைகாரணமாக இதுவரை 6 பேர் பலியாகி உள்ளதாகவும், 22 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனமழை காரணமாக 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான ஜப்பானில் ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் பருவமழை பெய்வது வழக்கம். இந்த ஆண்டு  கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து உள்ளது

பசிபிக் பெருங்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பேய்மழை கொட்டி வருகிறது.

ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கியுசு தீவுக்கு உட்பட்ட புகுவோகா மற்றும் ஒயிட்டா நிர்வாக மண்டலங்களில் இடி-மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

புகுவோகா பகுதியில் 774 மி.மீ. மழை பெய்திருப்பதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது.

இது வழக்கமாக ஜூலை மாதம் முழுவதும் பெறும் மழையளவை விட 2.2 மடங்கு அதிகமாகும். இந்ததொடர் கனமழை காரணமாக மக்களின் இயல்புவாழ்க்கை அடியோடு முடங்கி உள்ளது.

புகுவோகா மற்றும் ஒயிட்டா பகுதிகளில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. பல இடங்களில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதுவரை கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக 6 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வெள்ளம் காரணமாக 22 பேரை காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாயமானவர்களை தேடும் பணிகளை மீட்புக்குழுவினர் முடுக்கி விட்டு உள்ளனர்.

மீட்பு பணிகளில்  போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள் என 7,500 பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த கனமழை காரணமாக  4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட அவர்கள் அனைவரும், அங்குள்ள பள்ளி, கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.