தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வாழப்பாடி ராமமூர்த்தியின் 78வது பிறந்தநாள் இன்று.
தமிழகத்தை சேர்ந்த வாழப்பாடி ராமமூர்த்தி, 6 முறை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும், இரண்டு முறை மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே உள்ள காவிரி பிரச்சினைக்காக தனது மத்திய அமைச்சர் பதவியை உதறி தள்ளி தமிழக விவசாயிகள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் வாழப்பாடியார்.
1940ம் ஆண்டு ஜனவரி 18ந்தேதி அன்று, சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பிறந்த வாழப்பாடியார், தனது 19 வயதில் இருந்தே தீவிர அரசியல் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். அதைத்தொடர்ந்து 1959ம் ஆண்டு திராவிடர் கழகத்தில் இணைந்த அவர், பின்னர் 1960ம் ஆண்டு அதில் இருந்து விலகி இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.
வாழப்பாடியாரின் சுறுப்பான அரசியல் பணி மற்றும் பொதுமக்களின் அணுகும் அவரது பன்முகத்தன்மையால் அவருக்கு 1968ம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவி வழங்கி காங்கிரஸ் கட்சி கவுரவித்தது. பின்னர் காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான ஐ. என். டி. யூ. சியின் தலைவராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு காங்கிரசின் மாநிலத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
1977 பொதுத் தேர்தலில் தர்மபுரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1980, 1984, 1989, 1991 பொதுத் தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியிலிருந்தும், 1998 தேர்தலில் சேலம் மக்களவைத் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்று மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1991-92ம் ஆண்டு பி. வி. நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் மத்திய அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
இடையில் சிறிது காலம் காங்கிரசில் இருந்து விலகி திவாரி காங்கிரசில் இணைந்து அதன் தமிழ்நாட்டுத் தலைவராகப் பணியாற்றினார்.
அதைத்தொடர்ந்து தமிழகத்தில் 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோலிவியை தழுவினார்.
அதையடுத்து, தமிழக ராஜீவ் காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கி பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து 1998 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்றறார்.
அதன் காரணமாக அவருக்கு அடல்பிகாரி வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பதவி கிடைத்தது. பெட்ரோலியத்துறை காபினட் அமைச்சராக பொறுப்பு வகித்தார். அதைத்தொடர்ந்து 199ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது பாஜ கூட்டணியிலேயே போட்டியிட்டார். ஆனால், இந்த முறை வெற்றிக்கனியை பிடிக்க முடியவில்லை.
இதன் காரணமாக 2001ம் ஆண்டு தனது , தமிழக ராஜீவ் காங்கிரஸ் என்ற கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் தாய்க்கட்சியான காங்கிரசில் இணைந்தார்.
இந்நிலையில் 2002ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக மரணத்தை தழுவினார். அவருடைய இழப்பு தமிழக காங்கிரசுக்கும், விவசாயிகளுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாக அமைந்தது.
வாழப்பாடியார் பி.வி.நரசிம்மராவ் (1991-92) தலைமையிலான அமைச்சரவையில் மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சராக பதவி வகித்தபோது, தமிழகம் கர்நாடகம் இடையே காவிரி பிரச்சினை தலைவிரித்தாடியது.
அப்போது காவிரி பிரச்சினை விசயத்தில், மத்திய அரசு கர்நாடகாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டது. இதன் காரணமாக கொதித்தெழுந்த வாழப்பாடியார், மத்திய அரசின் போக்கைக் கண்டித்து தனது பதவியை தூக்கி எறிந்தார்.
தமிழ்நாட்டின் பொதுப்பிரச்சினைக்காவும், தமிழக விவசாயிகளுக்காகவும் தனது பதவியை, துச்சமென தூக்கி எறிந்து, தனது எதிர்ப்பை காட்டி, தமிழக மக்களின் ஆதரவை அள்ளிய ஒரே ஒரே தமிழக தலைவர் வாழப்பாடியாரே…..