திருச்சி: வைகுண்ட ஏகாதசி – சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, ஜனவரி 10 அன்று திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட ஆட்சியர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
108 வைணவத் தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. 21 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின்போது, வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறக்கப்படும் நிகழ்வு பெரும் விசேஷமானது. இதை கண்டுகளிக்க பல லட்சம் போர் வருவார்கள்.
இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் திருவிழா இன்று தொடங்கி உள்ள நிலையில், ஜனவரி 10ந்தேதி அன்றுவைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி, ஜனவரி 10ம் தேதி திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 25ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.
இந்த விடுமுறையானது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் பொருந்தும். எனினும் பள்ளி அல்லது கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது.