ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.  இன்று  முற்பகல் 11மணி வரை 28% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் இறுதிக் கட்டத் தோ்தல் செவ்வாய்க்கிழமை (அக்.1) நடைபெறுகிறது. இன்று காலை 7மணிக்கு வாக்கு பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை முதலே விறுவிறுப்பான  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலை 9 மணி நிலவரப்படி,   பந்திபோராவில் 11.64 சதவீத வாக்குகளும், பாரமுல் 8.89%, ஜம்மு 11.46%, கதுவா 13.09%, குப்வாரா 11.27%, உத்தம்பூா் 14.23%, சம்பா 13.31% வாக்குகளும் பதிவாகியுள்ளன. இதைத்தொடர்ந்து காலை 11மணி வரை 28% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370, கடந்த 2019-இல் ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்ட பின்னா் நடைபெறும் தோ்தல் என்பதால் கூடுதல் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் இறுதிக் கட்டத் தோ்தல் நடைபெறும் 40 தொகுதிகளிலும் காலை முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகின்றனர். ஜம்மு பிராந்தியத்தில் உள்ள ஜம்மு, உத்தம்பூா், சம்பா, கதுவா உள்ளிட்ட பகுதிகளிலும் வடக்கு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா, பந்திபோரா, குப்வாரா ஆகிய பகுதிகளிலும்   வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. சில பகுதிகளில் விறுவிறுப்பாகவும் பல பகுதிகளில் மந்தமாகவும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த பகுதிகிளல் 5,060 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் 20,000-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

காலை 11 மணி வரை 40 தொகுதிகளிலும் சுமார் 28.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜம்முவில் உள்ள உதம்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 33.84 சதவீத வாக்குகளும், காஷ்மீரின் பாரமுல்லாவில் காலை 11 மணி வரை 23.2 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் குழு தெரிவித்துள்ளது. ஜம்முவில் உள்ள செனானி தொகுதியில் இதுவரை 34.67 சதவீத வாக்குகளும், சோபூர் தொகுதியில் 17.2 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது.

அக்டோபா் 8-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.