ஸ்ரீநகர்
பாஜகவினரின் அமளியால் ஜம்மு காஷ்மீர் சட்டசபை கூட்டத்தொடர் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 4-ந்தேதி ஜம்மு-காஷ்மீர் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக தொடங்கியது. தொடர் தொடங்கியதும் தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவரும், 7 முறை எம்.எல்.ஏ.வுமான அப்துல் ரஹீம், சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
நேற்று மக்கள் ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. வஹீத் பாரா, ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்த்ஹு ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் அளிப்பது தொடர்பாக மத்திய அரசு மற்றும் சட்டசபை உறுப்பினர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் நேற்றைய தினம் சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இன்று சட்டசபை மீண்டும் கூடியது. அப்போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இன்றும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் 15 நிமிடங்களுக்கு அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோது மீண்டும் அமளியில் ஈடுபட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். எனவே சபாநாயகர் அப்துல் ரஹீம், கூட்டத்தொடரை நாள் முழுவதும் ஒத்திவைத்துள்ளார்