ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் என்கவுண்டர் செய்தனர்.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஹக்ரிபுரா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலைத்தொடர்ந்து, அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், அந்த இடத்தை சுற்றிவளைத்து, தேடுதல் வேட்டை நடத்தினர். இதையறிந்த பயங்கரவாதிகள், அங்கிருந்து தப்பிக்கும் நோக்கில், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். ஆனால், பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். என்கவுண்டர் நடந்த பகுதியில் இன்னும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, நேற்று இரவு அனந்த்நாக் மாவட்டத்தில் சண்ட்புரா பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டரான முகமது அஷ்ரப் தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த பயங்கரவாதிகள் முகமது மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமதை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது அஷ்ரப்பின் வீட்டிற்கு சென்ற காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங் மற்றும் ஐஜி விஜய் குமார் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் முகமது அஷ்ரப்பின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதான தாக்க்குதலுக்கு காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்கா கண்டனம் தெரிவித்துள்ளார்.