டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது.  இன்று நாடாளுமன்றத்தில்  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜம்மு காஷ்மீரின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.மேலும், இரு அவைகளும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஷிப்டு முறையின்றி  வழக்கமான நேரத்தில்  இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட அமர்வு, ஜனவரி 31ந்தேதி குடியரசுத்தலைவர் உரையுடன் தொடங்கி,  கடந்த மாதம் (பிப்ரவரி) 11ம் தேதியுடன் நிறைவடைந்தது.  இதையடுத்து, இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது. இந்த அமர்வு  ஏப்ரல் 8ந் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய அமர்வில், ஜம்மு காஷ்மீரின் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.

கொரோனா காரணமாக, இரு அவைகளும் வெவ்வேறு நேரத்தில் இயங்கி வந்த நிலையில், தற்போது வழக்கம் போல் காலை 11 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த தொடரில் மத்தியபட்ஜெட் தொடர்பான மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மேலும், நாடு முழுவதும் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை போன்றவற்றை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.  மேலும் மாநில ஆளுநரின் அதிகாரம் குறித்த  பிரச்னையை எழுப்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்டு வரப்பட்டது தொடர்பான அறிக்கையை வெளியிட, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.