புதுடெல்லி: மோடி அரசின் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணாக்கர்கள், இன்று(திங்கள்) அதிகாலையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.
குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை மாணாக்கர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் அது வன்முறையாக மாற்றப்பட்டு, கைகலப்பாக மாறியதோடு, பேருந்து மற்றும் வாகனங்களுக்குத் தீவைக்கப்பட்டது.
மேலும், மாணாக்கர்கள், போலீசார் உட்பட பல தீயணைப்பு வீரர்களும் இச்சம்பவங்களால் காயமடைந்தனர். போராட்டங்களையடுத்து, மொத்தம் 50க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கைதுசெய்யப்பட்டு தலைநகரின் பல்வேறு காவல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்தனர்.
இதனிடையே, இந்த விஷயத்தில் டெல்லி சிறுபான்மை ஆணையம் தலையிட்டது. காவலில் வைக்கப்பட்ட மாணாக்கர்களை விடுவிக்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை வழங்கிய அந்த ஆணையம், திங்கட்கிழமை மாலை 3 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இதனிடையே, கால்காஜி மற்றும் நியூஃபிரண்ட்ஸ் காலனி உள்ளிட்டப் பகுதிகளிலுள்ள காவல் நிலையங்களில் வைக்கப்பட்ட போராட்ட மாணாக்கர்கள், இன்று அதிகாலையே விடுவிக்கப்பட்டதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.