புதுடெல்லி: வடஇந்தியா முழுவதும் பரவியுள்ள தியோபந்தி மதரஸாக்களில் நவீன கல்வியை அறிமுகம் செய்வது தொடர்பான செயல்திட்டத்தை உருவாக்க ஒரு கமிட்டியை அமைத்து உத்தரவிட்டுள்ளது ஜமியாத் உலெமா-இ-ஹிந்த்.
நாட்டிலுள்ள மிக வலுவான முஸ்லீம் அமைப்புகளில் இந்த அமைப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும். நவீன கல்வியை அறிமுகம் செய்வது தொடர்பான முன்மொழிவானது கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பே வழங்கப்பட்டிருந்தாலும், அதை இந்த அமைப்பு கடுமையாக எதிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த அமைப்பு ஏற்படுத்தியுள்ள கமிட்டியில் முஸ்லீம் மத அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மதரஸாக்கள் தொடர்ந்த கண்காணிப்பிற்கு உள்ளாவது மற்றும் மதரஸாக்களில் கல்வி பயிலும் குழந்தைகளின் எதிர்கால வேலைவாய்ப்பு ஆகியவற்றை கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 1993ம் ஆண்டு முதலே பல்வேறு அரசாங்கங்கள், மதரஸாக்களை நவீனப்படுத்தும் வகையில் கோடிக்கணக்கான ரூபாய்கள் நிதி ஒதுக்கின. ஆனால், அந்த நிதியை அரசின் நிதியுதவி பெறும் மதரஸாக்கள் மட்டுமே பயன்படுத்தின. ஆனால், தியோபந்தி மற்றும் அஹில்-இ-ஹதிஸ் ஆகிய அமைப்புகளுடன் இணைக்கப்பட்ட மதரஸாக்கள் இந்த சீர்திருத்த நடவடிக்கையில் பங்கேற்கவேயில்லை.