சென்னை: பொங்கலையொட்டி, தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல் முதல் தொடங்கப்பட உள்ளது. அதன்படி, வரும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றவை.
பல்வேறு தடைகளை கடந்து நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் நிபந்தனைகளை ஏற்கனவே அறிவித்து உள்ளது. அதன்படி, கடுமையான விதிமுறைகளை செயல்படுத்தி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறத. மாடு பிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பரிசுகளும் வழங்கப்படும். சிறந்த காளை மற்றும் சிறந்த மாடு பிடி வீரர்களுக்கு கார், பைக் என பரிசுகள் வழங்கப்படும்.
இந்த சூழலில், 2025ம் ஆண்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. அதன் விபரம் பின்வறுமாறு:
1). மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறாத அமைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கூடாது.
2). ஜல்லிக்கட்டின்போது காளைகளை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும்.
3). ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
4). ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் தேதிக்கு முன்பே அனைத்து ஏற்பாடுகளையும் உறுதி செய்ய வேண்டும்.
5). ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரும்புவோர், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
6). அரசால் அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர வேறு, இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க கூடாது.
7). ஜல்லிக்கட்டு போட்டி முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என பல நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.