மதுரை:  அரசு விழா என்ற பெயரில் தி.மு.க. கட்சி விழாவாக ஜல்லிக்கட்டு மாறிவிட்டது என அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றம் சாட்டி உள்ளார்.

அலங்காநல்லூரில் இன்று நடைபெற்று வரும்  ஜல்லிக்கட்டு விழாவில் முறையாக பதிவு செய்யப்பட்ட உள்ளூர் மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறி நேற்று மாலை முதல் அந்த ஊர் மக்கள் போராட்டம் நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுமா என கேள்வி எழுந்தது. ஆனால், அதிகாரிகள் மற்றும் திமுகவினர் நள்ளிரவில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இன்று போட்டி நடைபெற்று வருகிறது.

முன்னதாக,  அலங்காநல்லூரைச் சேர்ந்த மக்களின் காளைகளுக்கு, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியாதபடி, 800 நம்பருக்கு மேற்பட்ட டோக்கன்களை வழங்கியிருப்பதாகக் கூறி, அப்பகுதி மக்கள் வாடிவாசல் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சுமார் 200 பேருக்கும் மேலாக திரண்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள், அரசு மற்றும் அதிகாரிகள்,  திட்டமிட்டே தங்களை புறக்கணிப்பதாகவும், சரியான காரணமின்றி தங்களின் காளைகளுக்கு டோக்கன் நிராகரிக்கப்படுவதாக  குற்றம் சாட்டினர்.  அவர்களை அதிகாரிகள், விழா குழுவினர் சந்தித்து சமாதானப்படுத்தினார். அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்ட நிலையில், நள்ளிரவு அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அதிமுக எம்எல்ஏவுமான  ஆர்.பி.உதயகுமார் அரசையும், அதிகாரிகளையும் கடுமையாக சாடினார்.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள், மாடுபிடி வீரர்களை தேர்வு செய்வதில் பாரபட்சம்  காட்டுவதாக குற்றம் சாட்டியதுடன், அரசு விழா என்ற பெயரில் தி.மு.க.வினர், இதை கட்சி விழாவாக  மாற்றி வருகின்றனர் என்றும் சாடினார்.

பொங்கல் திருநாளில் பாரம்பரிய மண்வாசனையுடன், உலகத்திற்கு எடுத்துக்காட்டும் வகையில் வீரத்தை பறைசாற்றும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு உரிமையை ஜெயலலிதா அரசு பெற்று தந்தது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழகத்தில் எந்த முதல்-அமைச்சரும் செய்திடாத வகையில் முதன்முதலாக பச்சை கொடியசைத்து எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும் தைத்திருநாளில் 2 கோடியே 18 லட்சம் குடும்பங்களுக்கு 2,500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கினார்.

இந்த தை திருநாளில் ஜல்லிக்கட்டு விழா அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இங்கு ஊர் கமிட்டி, ஊர் பொதுமக்களை, மண்ணின் மைந்தர்களை ஒதுக்கிவிட்டனர். தமிழர் திருநாளை தமிழர்களுக்கு ஏமாற்று திருநாளாக தி.மு.க. அரசு அமைத்துவிட்டது.  அரசு விழா என்ற பெயரில் தி.மு.க. கட்சி ஜல்லிக்கட்டு விழாவாக அமைச்சர் மூர்த்தி நடத்தி வருகிறார்.

ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும். அப்போதுதான் அந்த சாமிக்கு பெருமை. ஆனால் இன்றைக்கு அரசு எந்திரத்தை தி.மு.க. கட்சி எந்திரமாக வைத்து நடத்தி, ஊர் கமிட்டியை ஊர் எல்லையில் நிறுத்தி விட்டார்கள். வாடிவாசலில் தி.மு.க. கட்சிகளை வைத்து விழாவை தொடங்கி உள்ளார்கள். இது ஜல்லிக்கட்டு விழாவிற்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. ஜல்லிக்கட்டு மதிப்பை சிதைப்பதாக உள்ளது.

ஜல்லிக்கட்டு விழாவில் முறையாக பதிவு செய்யப்பட்ட உள்ளூர் மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் பாரபட்சம் காட்டப்பட்டு வருகிறது. இது குறித்து அனைத்து தரப்பினரும் பேசி இருக்கிறார்கள். ஆன்லைன் பதிவில் கடும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. எனவே வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் ஏற்பாடாமல் விளையாட்டில் அரசியல் புகுத்தாமல் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.