சென்னை: தமிழக அரசிதழில் அறிவிக்கப்படாத பகுதிகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற போட்டிகள் நடத்த அனுமதி கிடையாது என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டில், தமிழர்களின்  வீர விளையாட்டுக்களான ஜல்லிக்கட்டு,  மஞ்சுவிரட்டு, வடமாடு பிடித்தல் போன்ற போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, போட்டிகள் எங்கு நடைபெற வேண்டும் என்பது குறித்து தமிழக அரசின் உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,  தமிழ்நாட்டின் பாரம்பரிய மற்றும் பண்பாட்டை பாதுகாக்கும் வகையில் நடத்தப்பட்டுவரும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள், மஞ்சுவிரட்டு போன்ற போட்டிகள்,  திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றி நடத்தப்பட வேண்டும் என்றும்,  அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மட்டும்தான்  நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுன் போட்டிகள் நடைபெற வேண்டும் என்று கூறியுள்ளது.

ஆனால், பல ஊர்களில் போட்டிகள் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர வேறும் சில இடங்களிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. சில இடங்களில் போட்டிகள் நடத்த அனுமதிகளும் கோரப்படுகின்றன.

இதுதொடர்பாக காரைக்குடி கண்டமனுரில் மஞ்சுவிரட்டு அனுமதிக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்த தமிழகஅரசு அரசிதழில் இல்லாத பகுதிகளில் வடமாடு, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற போட்டிகள் நடத்த அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளது.