பெங்களூரு:
சசிகலாவிற்கு பரோல் வழங்க பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 16ம் தேதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சையில் இருக்கும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சொத்தகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா, தனது கணவர் நடராஜனை பார்ப்பதற்காக பரோலில் வெளிவர விண்ணப்பித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதத்தில் நடராஜனுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்ட போது அவரை பார்த்துக் கொள்வதற்காக சசிகலாவுக்கு ஐந்து நாட்கள் பரோல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் சசிகலா பரோல் கோரினார். தனது கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் அவரை அருகில் இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அவரது மனுவை சிறைத்துறை ஏற்கவில்லை. மிகச் சமீபத்தில்தான் பரோல் வழங்கப்பட்டது என்பதால் மீண்டும் பரோல் தர முடியாது என்றும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் உயிரிழப்புகள் நேர்ந்தால் மட்டுமே சிறை விடுப்பு தர முடியும் என்றும் சிறைத்துறை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.