போபால்: ஜக்கி வாசுதேவ் தன்னை சத்குரு என்று அழைக்கலாம், ஆனால் உண்மையில் அவர் ஒரு மோசடி பாபா என்று மகசேசே விருது பெற்ற தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நீர் உரிமைச் சட்டம் குறித்த கருத்தரங்கில் அவர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
முந்தைய அரசு ஜக்கி வாசுதேவுக்கு அளித்த நிதி குறித்து விசாரணை நடத்த வேண்டும். அவை எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து ஆராயப்பட வேண்டும்.
ஆறுகளுக்கு புத்துயிர் அளிக்க தவறவிட்டுவிட்டு, காவிரிக்கு குரல் கொடுப்போம் என்று அழைப்பது மோசடி. அவர் தமது மனைவியை கொன்றவர்.
கோயம்புத்தூரில் உள்ள விவசாயிகளுக்கு வினோபா பாவேவின் பூடான் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிலத்தை ஜக்கி அபகரித்தார். இந்த விஷயம் இப்போது நீதிமன்றத்தில் உள்ளது.
இந்த பாபாக்களால் நதிகளை புதுப்பிக்க முடியாது அல்லது நீர் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க பங்களிக்க முடியாது. இவர்கள் ஆடம்பரம், அதிகாரம் இரண்டையுமே நம்புகிறார்கள். அவர்களுக்கு எந்த முக்கியத் துவமும் கொடுக்கக்கூடாது என்றார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை ஈஷா அறக்கட்டளை முற்றிலும் மறுத்து உள்ளது. ஒரு காலத்தில், நல்ல வேலையைச் செய்யத் தொடங்கிய ஒருவர் மிகவும் மதிப்பிற்குரிய ஒரு நபரின் மீதான இப்படிப்பட்ட தனிப்பட்ட தாக்குதல்களை தவிர்த்திருக்க வேண்டும்.
அனைத்தும் அப்பட்டமான பொய்கள், அவதூறுகள். இந்த குற்றச்சாட்டுகளில் எதுவும் உண்மை இல்லை. ஈஷா அறக்கட்டளை ஒருபோதும் நதி இணைப்பதை ஆதரிக்கவில்லை.
நதிகளுக்கான பேரணி, காவிரி அழைப்பிற்கும் நதி இணைப்போடு எந்த தொடர்பும் இல்லை. இது பல முறை தெளிவுப்படுத்தப்பட்டுவிட்டது. மத்திய பிரதேச அரசிடமிருந்து அறக்கட்டளை எந்த பணத்தையும் பெறவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.