அமராவதி:
ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று நடைபெறும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அதைத் தொடர்ந்து வரும் வரும் 30ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்கிறார்.
175 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஆந்திர மாநிலத்தில் லோக்சபா தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. அங்கு காங்கிரஸ், பாஜக, தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி என 4 முனை போட்டி நிலவியது. இதில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து, இன்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் விஜயவாடாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முறைப்படி சட்டமன்றக் குழு தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு செய்யப்படுகிறார்.
இதைத்தொடர்ந்து, ஆந்திரப்பிரதேச ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மனை சந்தித்து அவர் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். வரும் 30ந்தேதி ஆந்திர முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
தனது பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உள்பட சில மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிகிறது.