மும்பை: கடந்த சில ஆண்டுகளாகவே, ஜடேஜாவின் பேட்டிங்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்துவருவதால், அவருக்கு கூடுதல் பந்துகளை சந்திக்க வாய்ப்பு தருவதும் பொருத்தமான ஒன்றாக இருக்கிறது என்று பாராட்டியுள்ளார் சென்னை அணி கேப்டன் தோனி.

இன்று, பெங்களூருக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், கடைசி ஓவர்களில், ஜடோஜாவும் தோனியும் பேட்டிங் செய்தனர். அப்போது, 3 பந்துகளை மட்டுமே சந்தித்த தோனி, ஜடேஜாவுக்கு கூடுதல் ஸ்ட்ரைக் அளித்தார். அது மிகுந்த பலனைக் கொடுத்தது. கடைசி ஓவரில் மட்டும், 36 ரன்களைக் குவித்துவிட்டார் ஜடேஜா.

இப்போது அதுகுறித்து பேசியுள்ள தோனி, “ஜடேஜாவின் பேட்டிங்கில், சமீப ஆண்டுகளில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. எனவே, அவர் கூடுதல் பந்துகளை எதிர்கொள்வதற்கு தகுதியானவர். கடைசி கட்டத்தில், நல்ல ஃபார்மில் ஆடிவரும் இடதுகை பேட்ஸ்மென்களை கட்டுப்படுத்துவது கடினம்.

இன்று, அது ஜடேஜா விஷயத்திலும் மெய்யானது. ஜடேஜா, தன்னந்தனியாக ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர்” என்றுள்ளார் தோனி.

அதேசமயம், “நான் ஒவ்வொரு போட்டியிலும், என்னை நிரூபிப்பதற்கு கடுமையாக முயற்சி செய்கிறேன். ஆல்ரவுண்டராய் இருப்பது கடினமான விஷயம். ஏனெனில், அனைத்து விஷயங்களிலும் சிறப்பாக செயல்பட வேண்டிய நெருக்கடி ஏற்படும்” என்றுள்ளார் ஆல்ரவுண்டர் ஜடேஜா.