சென்னை:
இன்று சென்னையில் நடைபெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்பின் போராட்டத்தில் கலந்துகொண்ட தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பார்வையற்ற அரசு பள்ளி ஆசிரியர் திடீரென மரணம் அடைந்தார். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ஊதிய உயர்வு , புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுதி இன்று கோட்டை முற்றுகை போராட்டத்துக்கு ஜாக்டோ, ஜியோ அழைத்து விடுத்திருந்தது.
இந்நிலையில், தலைமை செயலகம் அமைந்துள்ள அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், சென்னை வாலாஜா சாலை, அண்ணா சாலை, கோயம்பேடு உள்பட பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் சென்னை வாலாஜா சாலை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில், தஞ்சை பாபநாசம் அரசு பள்ளி ஆசிரியர் தியாகராஜன் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றிருந்தார். அவர் உள்பட போராட்டக்காரர்களை கைது செய்த போலிசார் எழும்பூரில் உள்ள பள்ளிக்கூடம் உள்ளிட்ட இடங்களில் தங்க வைத்துள்ளனர்.
இந்நிலையில், பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஆசிரியர் தியாகராஜனின் உயிர் திடீரென பிரிந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பார்வையற்ற ஆசிரியர் மரணத்திற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த ஆசிரியர் தியாகராஜன் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார். தஞ்சை பாபநாசம் அரசு பள்ளியில் சிறப்பு ஆசிரியராக தியாகராஜன் பணிபுரிந்து வந்தார்.
போராட்டத்திற்கு வந்த இடத்தில் ஆசிரியர் ஒருவர் மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.