திருவனந்தபுரம்
பலாப்பழம் கேரள மாநிலத்தின் பழமாக தேர்வு செய்யப்பட்டு இந்த அறிவிப்பு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ளது.
கேரளாவில் பலாப்பழம் பெருமளவில் உற்பத்தி ஆகிறது. இந்த பலாப்பழம் நாட்டின் பல பகுதிகளுக்கும் ஒரு சில வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. கேரளாவின் முக்கிய பண்டிகைகளான விஷு, ஓணம் ஆகிய தினங்களில் பலாப்பழத்தைக் கொண்டு செய்யப்படும் பாயசம் முதலிடம் பெறுகிறது. இந்த பலாப்பழத்தை மேலும் பிரபலப்படுத்த அரசு திட்டமிட்டது.
அது குறித்து ஒரு சில தினங்கலுக்கு முன்பு கேரள மாநில வேளாண்மைத் துறை அமைச்சர், சுனில் குமார், “கேரள மாநிலம் பலாப்பழத்தை மாநிலப் பழமாக அங்கீகரிக்க உள்ளது. இங்கு விளைவிக்கப்படும் பழம் இயற்கை உரங்கள் இட்டு விளைவிக்கப் படுவதால் கேரள பலாப்பழம் தனிச்சுவை கொண்டதாக உள்ளது. அதனால் வரும் 21ஆம் தேதி கேரள சட்டப்பேரவையில் மாநிலப் பழமாக அறிவிக்க உள்ளது” எனத் தெரிவித்தார்.
அமைச்சர் சுனில் குமார் கூறிய படி நேற்று கேரள மாநில சட்டப்பேரவையில் பலாப்பழம் கேரள மாநிலப் பழமாக அறிவிக்கப் பட்டுள்ளது.