ஸ்ரீநகர்:
எய்ம்ஸ் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வில், முதன்முறையாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியைச் சேர்ந்த மாணவி இர்மிம் ஷமிம் வெற்றி பெற்று, மருத்துவம் படிக்க தேர்வு பெற்றுள்ளார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் எய்ம்ஸ் மருத்துவ சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இதில், ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த இர்மிம் ஷமிம் என்ற மாணவி தேர்வு எழுதினார்.
இந்த ஷமிம் தேர்ச்சி பெற்று மருத்துவம் படிக்க தேர்வாகி உள்ளார். இதன் காரணமாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து, மருத்துவப் படிப்புக்குத் தகுதிபெற்ற முதல் குஜ்ஜார் இன பெண் என்ற பெருமையை இர்மிம் ஷமின் பெற்றுள்ளார்.
இவரது ஊருக்கு அருகே நல்ல பள்ளி இல்லாத நிலையில், தினசரி சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று படித்து வந்த ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த ஷமிம், படிப்பை சவாலாக நினைத்து போராடி மருத்துவர் நுழைவு தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். ஷமிமுக்கு அவரது குடும்பத்தினர் இனிப்பு ஊட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதுகுறித்து கூறிய ஷமிம், “ஒவ்வொருவருக்கும் அவர்களின் வாழ்க்கையில் ஏதேனும் சிக்கல் உள்ளது. நீங்கள் சவால்களை எதிர்த்துப் போராட வேண்டும், வெற்றி நிச்சயமாக உங்களுக்கு வரும் என்றும், ஒரு வெற்றிகரமான மருத்துவராக மாறி ஜம்மு-காஷ்மீர் மற்றும் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும் தெரிவித்து உள்ளார்.