இறுதிப் பாடத்தை இடித்துரைக்க வேண்டிய நேரம்..

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் சிறப்பு கட்டுரை …

தீவிரவாதிகளின் தாக்குதல்கள் உலகம் முழுதும் பல்வேறு வகையில் நடந்து வந்தாலும், அவை நிகழ்த்தப்படும் விதம்தான் முக்கியமாக பார்க்கப்படும்.

காரணம், அதற்குப் பின்னால் தீவிரவாதிகள் விடும் எச்சரிக்கைகளின் குறியீடுகள்தான்.

அந்த வகையில்தான் நாட்டையே உலுக்கும் அளவுக்கு, காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று இருக்கின்றனர்.

அனைவருமே பாதுகாப்பின்றி நிராயுதபாணியாக கோடை விடுமுறையை குடும்பத்தோடு கழிக்க பசுமைப் புல்வெளி பிரதேசத்துக்கு வந்தவர்கள்.

இப்படிப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான கொடூரமான தாக்குதலுக்கு உலக அளவில் எவராலும் ஒரு சதவீதம் கூட நியாயம் கற்பித்துவிட முடியாது.

அதனால்தான் தீவிரவாதத்தை வளர்த்து விடும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இந்த முறை வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கியது.

வழக்கமான பதிலடிகள் உடன்
நதிநீர் ஒப்பந்தத்தை கூட ஒரே உத்தரவில் ரத்து செய்து பாகிஸ்தானுக்கு தண்ணீரை நிறுத்திவிட்டோம் என்று எச்சரித்தது.

போருக்கே தயார் என்ற நிலையை உலகுக்கே காட்டும் வண்ணம் உள்நாட்டில் அதற்கான பொதிகைகள் நடைபெறும் என்று அறிவித்து முப்படைகளை முடுக்கியும்விட்டது.

சமரசம் செய்கிறேன் என்று வழக்கமாக மூக்கை நுழைக்கும் நாடுகள்கூட, காஷ்மீரில் அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட விதத்தைக் கண்டு பின்வாங்கி விட்டன.

மே ஏழாம் தேதி ஒத்திகைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, யாருமே எதிர்பார்க்காத வகையில், நள்ளிரவும் அதிகாலையும் ஒன்றிணையும் வேளையில் பாகிஸ்தானின் தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதலை நடத்தியது இந்திய ராணுவம்.

தீவிரவாத முகாம்களை துல்லியமாக குறி வைத்து மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் தகர்த்தெறிந்தன. பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் நிலைகள் மீது தாக்குதல்.

ஆபரேஷன் செந்தூர் (குங்குமம்) என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய இந்த தாக்குதலுக்கு முன் நின்ற அதிகாரிகள் இருவருமே பெண்கள் என்பதுதான் சிறப்பம்சம்.

எவ்வளவு பேர் பலி? எந்த அளவுக்கு சேதம் என்றெல்லாம் இரு தரப்பில் சொல்லப்பட்டாலும் இறுதியான விவரங்கள் கிடைக்க சில நாட்களாகலாம்.

இவை தொடர்பான சந்தேகங்களை கேட்கவோ பதில்களை பெறவோ இது உகந்த தருணம் அல்ல. அதற்கான நேரம் வரும்போது அந்தக் கேள்விகள் எழுப்பப்படாமல் போகாது.

ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். தற்போது நடந்து கொண்டிருப்பது, இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கான ராணுவ நடவடிக்கை. அவ்வளவுதான், போரெல்லாம் கிடையாது. போர் உருவாகுமா இல்லையா என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது.

தீவிரவாதிகளை ஒழிக்கத்தான் ஆயுதங்கள் தேவை. அதை பயன்படுத்தும்போது தீவிரவாதிகள் அழிந்து விடுவார்கள். ஆனால் தீவிரவாதம் அப்படி அல்ல. அது ஒரு வன்மமான சித்தாந்தம். தொடர்ந்து தீவிரவாதிகளை வளர்த்துக் கொண்டே இருக்கும்.

இத்தகைய வன்ம சித்தாந்தத்தை தான் மத வெறி மூலம் ஊட்டுவதைத் தான் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் காலம் காலமாக பின்பற்றி வருகிறார்கள்.

நாட்டை இரண்டாகப் பிரித்த பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து ஒருநாள் முன்பாகவே சுதந்திரம் வாங்கி விட்ட பாகிஸ்தான், 78 ஆண்டுகள் ஆன பிறகும் இந்தியாவைப் போல ஒரு வலுவான ஜனநாயகத்தை பேண முடியாமல் இன்னமும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அடிக்கடி ராணுவ ஆட்சியில் மாட்டிக் கொண்டும் தவிக்கிறது.

இதெல்லாம் அவர்களோடு போனால் அது அவர்கள் உள்நாட்டு விவகாரம். ஆனால் தீவிரவாதத்தை வளர்த்து இந்தியாவுக்கு எதிராக ஏவி விட்டபடியே தொடர் தொல்லையாக இருப்பதுதான் பிரச்சனை.

தீவிரவாதத்தை வளர்த்து வளர்த்து அண்டை நாடு மேல் ஏவி அதை வைத்தே தங்களை நிலை நிறுத்திக் கொள்ளும் போக்கு தான் பாகிஸ்தான் ஆட்சியாளரிடம் காலம் காலமாக தென்படுகிறது. புரியும்படி சொன்னால், இந்தியா எதிர்ப்பு ஒன்றே, பக்கா அரசியல் பிசினஸ்.

இத்தகைய வன்ம சித்தாந்தம் கொண்டவர்களிடம், இனிமேலும் இப்படி நடந்தால், ஒன்றுமில்லாமல் காணாமல் போகச் செய்து விடுவோம் என்று சொல்லி சில செயல்பாடுகள் மூலம் மரண பயம் காட்டுவதுதான் ராஜதந்திரம்.

போரை நடத்துபவனைவிட, பயங்கர விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும் என்று மண்டையில் உரைக்கிற மாதிரி புரிய வைத்து போரே வேண்டாம் என்று எதிரியை பின்வாங்க வைப்பவன்தான் புத்திசாலி என்பார்கள்..

நாட்டின் மீதான தாக்குதலுக்கு நமது ராணுவம் பதிலடி கொடுக்கும்போது அதற்கு இந்திய மக்கள் அனைவரும் ஆதரவு தந்து பின்பலமாக நிற்பது அவசியம்.

ராணுவத்தின் நியாயமான நடவடிக்கைகளுக்கு பின்னால், இந்தியன் என்ற வகையில் ஒவ்வொரு குடிமகனின்தேச பக்தி தான் நிற்க வேண்டுமே தவிர மதமும் அரசியலும் அல்ல.

தீவிரவாத வெறிபிடித்த பாகிஸ்தான் வழிநடத்தல் காரர்களுக்கு கடைசி கட்ட பாடம் புகட்டியே ஆக வேண்டும் என்ற நிலையில் இந்தியா என்ன செய்யப் போகிறது என்பதுதான் கேள்வி.

ராஜாங்க ரீதியான செயல்பாடுகள் மூலம் பாகிஸ்தானை முற்றிலுமாக உலக நாடுகள் மத்தியில் இருந்து தனிமைப்படுத்தவேண்டும்.

இந்த தருணத்தை பயன்படுத்தி, இந்தியாவிடம் இருந்து விட்டுப் போன பகுதிகளை மீட்டெடுத்தே ஆக வேண்டும்.

இந்தியாவுக்கு எதிரான வெறியை வளர்ப்பவர்களால் உங்கள் நாடு தான் பாழாகிக் கொண்டிருக்கிறது என்பதை பாகிஸ்தான் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

இந்தியாவை சீண்டினால் பாகிஸ்தான் மக்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் பொருளாதாரம் எந்த அளவுக்கு கீழாக போகும் என்பதையும் உணர்ர்த்தியாக வேண்டும்.

இவ்வளவு மலை அளவு காரியங்கள் இருந்தாலும் இனியும் தள்ளிப் போடாமல் இந்த சந்தர்ப்பத்திலேயே சிந்தாமல் சிதறாமல் இந்தியா சாதித்தாக வேண்டும்.

– ஏழுமலை வெங்கடேசன்..