டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் உள்ள அனைத்து தெருநாய்களையும் தங்குமிடங்களுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலையில் செல்லும் குழந்தைகளை தெருநாய்கள் தாக்கும் சம்பவம் மற்றும் தாக்குதல்களைத் தொடர்ந்து ரேபிஸ் இறப்பு அதிகரித்து வருவதாலும் தெருநாய்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.

நீதிபதி ஜே.பி. பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

டெல்லியில் தெருநாய்களை இடமாற்றம் செய்வதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஆனால் விலங்கு உரிமை ஆர்வலர்கள் தடை உத்தரவைப் பெற்ற பிறகு இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டதாகவும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

“நாய்கள் இல்லாத பகுதியை உறுதி செய்வதற்கு நாம் எந்த வழியையும் கண்டுபிடிக்க வேண்டும், அப்போதுதான் குழந்தைகளும் முதியவர்களும் பாதுகாப்பாக உணர்வார்கள்,” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

1966ம் ஆண்டு வெளியான கிளாசிக் படமான தி குட், தி பேட், தி அக்லி படத்தை மேற்கோள்கட்டிய நீதிபதி பர்திவாலா, “நீங்கள் சுட விரும்பினால், பேச வேண்டாம் சுடவும். இது பேசுவதற்கான நேரம் அல்ல, செயல்பட வேண்டிய நேரம்.

இந்த விலங்கு ஆர்வலர்கள் என்று அழைக்கப்படுபவர்களெல்லாம், தங்கள் உயிரைக் கொடுத்த குழந்தைகளை மீண்டும் கொண்டு வர முடியுமா,” என்று கேள்வியெழுப்பினார்.

“நாங்கள் இதை எங்களுக்காகச் செய்யவில்லை, இது பொது நலனுக்காக. எனவே, எந்த உணர்வுகளும் இதில் ஈடுபடக்கூடாது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்று நீதிபதி பர்திவாலா கூறினார்.

தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்து நடுநிலை ஆலோசகர் கௌரவ் அகர்வாலா வழங்கிய ஆலோசனைகளை ஏற்று செயல்பட உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், அனைத்து பகுதிகளிலிருந்தும் தெருநாய்களை பிடித்து தொலைதூர இடங்களுக்கு மாற்றுமாறு உத்தரவிட்டார்.

விலங்குகளை குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், இந்தப் பயிற்சியைத் தடுக்கும் எந்தவொரு அமைப்பும் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்தனர்.

கருத்தடை மற்றும் தடுப்பூசி போட போதுமான ஊழியர்களைக் கொண்ட தெருநாய் பாதுகாக்குமிடங்களை உருவாக்க டெல்லி மாநில அரசு மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

“8 வாரங்களுக்குள் அத்தகைய உள்கட்டமைப்பை உருவாக்கியது குறித்து இந்த நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் நாய் காப்பகம் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட வேண்டும்” என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.