இத்தாலி:
இத்தாலியில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று இத்தாலி பிரதமர் ஜிசப்பே கான்டே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இத்தாலியின் முக்கியச் செய்தி நிறுவனங்கள் தரப்பில், ”இத்தாலியில் பிரதமர் ஜிசப்பே கான்டே சாலையோரங்களில் மக்கள் உடற்பயிற்சி செய்வதைத் தடைசெய்ய உள்ளார். மேலும், இத்தாலியில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படலாம்” என்று தெரிவித்திருந்தன.
ஒரு மாதமாக கரோனா வைரஸுக்கு உயிரிழப்புகள் அதிகரித்த நிலையில், கடந்த சில நாட்களாக இத்தாலியில் உயிரிழப்பு குறைவு, பாதிப்பு குறைவு, குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவை இத்தாலி மக்களுக்கு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், சீனா ஆகிய நாடுகள் கரோனா வைரஸால் அதிகம் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 95 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், இத்தாலியில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று இத்தாலி பிரதமர் ஜிசப்பே கான்டே தெரிவித்துள்ளார். இத்தாலியில் மார்ச் 9 ஆம் தேதி அமலுக்கு வந்த ஊரடங்கு ஏப்ரல் 13-ல் முடிவடைய இருந்தது குறிப்பிடத்தக்கது.