ரோம்: இத்தாலியக் கட்டடக்கலை நிபுணரும், 1992 பார்சிலோனா கோடைகால ஒலிம்பிக் ஸ்டேடியத்தை வடிவமைத்தவருமான 92 வயதான விட்டோரியோ கிரெகோட்டி கொரோனா வைரஸ் தொற்றால் மரணமடைந்தார்.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கோவிட்-19 தொற்று இவருக்கு இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட பின்னர், மிலன் நகரிலுள்ள மருத்துவமனையொன்றில் இவர் சிகிச்சைப் பெற்று வந்தார்.
ஆனால், சிகிச்சைப் பலனளிக்காமல் நிமோனியாவால் மரணமடைந்துவிட்டார். இவரின் மனைவி மரியானா மஸாவும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டாலும் காரணம் தெரியவில்லை.
கிரெகோட்டியின் மரணத்திற்கு, இத்தாலியின் மற்றொரு புகழ்பெற்ற கட்டடக்கலை நிபுணரான ஸ்டீஃபனோ பொயேரி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரை, சர்வதேச கட்டடக்கலை நிபுணர் என்று புகழ்ந்துரைத்துள்ளதுடன், இதுவொரு மாபெரும் துக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மிலன் நகரிலுள்ள ஆர்சிம்போல்டி ஒபேரா தியேட்டரை வடிவமைத்தவரும் விட்டோரியா கிரெகோட்டிதான் என்பது குறிப்பிடத்தக்கது.